Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் 3 - 4 நாட்களில் முடிவு எடுப்பார்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்னும் 3 - 4 நாட்களில் முடிவு எடுப்பார் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு மே21-ம் தேதி தமிழகத்தின் பெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினிகரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இவர்களை விடுதலை செய்யலாம் என கடந்த 2018 செப்டம்பரில் கூடிய தமிழக அமைச்சரவை தீர்மானித்தது. இந்த தீர்மானம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் இதன் மீது தமிழக ஆளுநர் 2 ஆண்டுகளுக்கு மேல் முடிவு எடுக்காமல் உள்ளார்.

இந்நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்னும் 3 -4 நாட்களில் முடிவு எடுப்பார்” என்றார்.

இந்த வழக்கு இதற்கு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் விரிவான சதி உள்ளதா என பல்துறை ஒழுங்கு கண்காணிப்பு குழு (எம்டிஎம்ஏ) விசாரித்து வருகிறது. எம்டிஎம்ஏ விசாரணை முழுமை பெறும் வரை தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளன் கடந்த 2016-ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, எம்டிஎம்ஏ விசாரணை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்வதாக சிபிஐ தெரிவித்தது. இதையடுத்து எம்டிஎம்ஏ விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது குறித்தும் தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவு எடுக்காமல் இருப்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

மத்தியில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் 7 பேரின் விடுதலையை மத்திய அரசு எதிர்த்தேவந்தது. கடந்த 2018, ஆகஸ்ட்டில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில்,“ராஜீவ் காந்தியை கொன்றவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்தப் படுகொலை மிகவும் கொடூரமானது. குற்றவாளிகளை விடுவிப்பது மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும்” என்று கூறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x