

குல்காம் பகுதியில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதி அபு காசிமுக்கான இறுதி வழிபாடு தடை செய்யப்பட்டதையடுத்து கடும் வன்முறை வெடித்தது.
பெரும்பாலும் இளைஞர்களான ஆர்பாட்டக்காரர்கள் ஜாமியா மசூதி பிரதான நுழைவாயிலில் கூடி அபு காசிமுக்காக இறுதி வழிபாடு நடத்தத் திட்டமிட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் பர்ஹான் வானியின் படம் அடங்கிய பேனர்களையும் கொண்டு வந்தனர்.
பாதுகாப்பு படையினர் மீது இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர். புகைக் குண்டுகளையும் திருப்பி வீசினர்.
தெற்கு காஷ்மீரின் குல்காம், புல்வாமா, மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது, அபுகாசிம் கொலையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றதால் கடையடைப்பும் தொடர் நிகழ்வானது.
அபுகாசிம் காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு தாக்குதல்களின் நேரடியாகவும் பின்னணியிலும் செயல்பட்டவர். உதாம்பூரில் ஆகஸ்ட் மாதம் பி.எஸ்.எஃப் வாகனம் மீது தாக்குதல் நடத்தியது மற்றும் தீவிரவாத எதிர்ப்பு முதன்மை போலீஸ் அதிகாரியான அல்டாப் அகமது கொலையிலும் தொடர்புடையவர்.
அபுகாசிமுக்கு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். வியாழனன்று நூற்றுக்கணக்கானோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீநகரில் லஷ்கர் தீவிரவாத அமைப்பின் தலைவர் மஹ்மூத் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அபு காசிமை கொலை செய்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்காது. காஷ்மீர் சுதந்திரமடையும் வரை நாங்கள் போராடுவோம்” என்று கூறியுள்ளார்.