

பிஹார் சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு சிக்கல் இருப்பதாக அதன் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) எச்சரித்துள்ளது. இதை தம் அதிகாரபூர்வ இந்தி இதழான ’பஞ்ச சன்யா’வில் கருத்தாகக் குறிப்பிட்டுள்ளது.
பஞ்ச சன்யா இதழில் பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மீது தனது முக்கிய கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ் பதிவு செய்துள்ளது. இதில், மூன்று கட்டங்களில் பாஜக முக்கியப் பிரச்சனைகளை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கட்சியின் நிர்வாகத்தில் அனைத்தும் சரியாக இல்லை என்றும் தேர்தல் பிரச்சாரம் செய்வதில் அம் மாநில தலைவர்கள் இடையே ஒற்றுமை காணப்படவில்லை எனவும் முதல் பிரச்சனையாகக் கூறியுள்ளது, இரண்டாவதாக பிஹாரின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பாஜகவிற்கு வலுவான அடித்தளம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. கடைசியாக, இந்த தேர்தலில் உயர்சமூகத்தினர் கட்சியின் மீது கோபம் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்றும், இதற்கு தேசிய ஜனநாயக முன்னணி வென்றால் அதன் முதல் அமைச்சராக பிறபடுத்தப்பட்டவரே இருப்பார் என அளிக்கப்பட்டிருக்கும் சூசகமான அறிவிப்பு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘பஞ்ச சன்யாவின் கட்டுரையை தொடர்ந்து நாம் தேர்தல் பிரச்சாரத்தை பிஹாரில் மேலும் வலுவாக்கி இருக்கிறோம். இதனால் தான் பிரதமர் நரேந்தரமோடியும் தம் பிரச்சாரக் கூட்டங்களின் எண்ணிக்கையை பிஹாரில் அதிகப்படுத்தி உள்ளார். பாஜகவின் தேசிய தலைவரான அமித்ஷாவும் அதிக நாட்கள் பிஹாரில் முகாமிட்டு தேர்தல் பணிகளை கூடுதலாக செய்து வருகிறார்.’ எனக் கூறுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் குறிப்பிட்டுள்ள இந்த மூன்று பிரச்சனைகளும் பாஜகவிற்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஜக தம் உறுதியாக வாக்கு வங்கியாகக் கருதும் உயர் சமூகத்தினர், தேர்தல் நாள் அன்று ஓட்டு போட வரவில்லை எனில் அது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகள் மீதும் தேஜமுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. இவர்கள் மீதான ஆர்.எஸ்.எஸ் கருத்து தமக்கு சாகமாக இல்லை என்றாலும் அவர்கள், நித்திஷ்குமாரின் மஹா கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது பாஜகவின் நம்பிக்கை எனக் கூறப்படுகிறது.
பிஹார் மாநில பாஜக தலைவர்கள் பிரச்சனையில் அமித்ஷா அனைத்த மட்டத்தினரையும் அழைத்து பேசி வருகிறார். இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் இடையே பேசி சமாதானம் செய்யவும் முயற்சித்து வருகிறார் அமித்ஷா. இந்த விஷயத்தில் அவர் முன்னாள் மத்திய அமைச்சரான ஷானாவாஸ் உசைன் மற்றும் மாநிலத் தலைவரான அஸ்வின் சௌபேவிற்கு இடையில் பேச்சு வார்த்தை நடத்தி பலன் கிடைத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
முதல் அமைச்சரை தேர்தெடுக்கும் விஷயத்திலும் அம் மாநிலத்தின் முன்னாள் துணை முதல் அமைச்சரான சுசில்குமார் மோடி, ஒவ்வொரு பிரச்சார மேடைகளிலும் பேசி வருகிறார். அதில் அவர், வெற்றிக்கு பின் முதல் அமைச்சராக ஒவ்வொரு சமூகத்தில் இருந்து பரிசீலிக்கப்படுவார்கள் எனவும், இறுதி முடிவை பாஜகவின் நாடாளுமன்ற கட்சி உயர்நிலைக்குழு எடுக்கும் என்றும் கூறி வருகிறார்.