Published : 21 Jan 2021 02:47 PM
Last Updated : 21 Jan 2021 02:47 PM

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நாளை கூடுகிறது: உட்கட்சித் தேர்தல், விவசாயிகள் போராட்டம் குறித்து முக்கிய ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட காரியக் கமிட்டி கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல், விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் நிர்வாகிகள் நேரடியாகப் பங்கேற்கமாட்டார்கள், காணொலி மூலமே கூட்டம் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய, எழுச்சிமிக்க, ஆக்கபூர்வமான தலைமை தேவை என்று மூத்த தலைவர் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தி, புதிய தலைவரைத் தேர்வு செய்ய 5 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழுவை சோனியா காந்தி அமைத்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி, ராஜேஷ் மிஸ்ரா,கிருஷ்ணா கவுடா, ஜோதிமணி, அரவிந்தர் சிங் ஆகியோர் கொண்ட குழு தேர்தல் நடத்தும் பணியை கவனித்து வருகின்றன.

தேர்தல் நடத்துவதற்கான பட்டியலை இந்தக் குழுவினர் தயாரித்துள்ள நிலையில், அதற்கு முன்பாக, காரியக்கமிட்டியிடம் தேர்தல் நடத்தும் தேதி குறித்து ஒப்புதல் பெற வேண்டும்.

அதன்பின் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆதலால், நாளை காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடக்கும் எனத் தெரிகிறது.

கோப்புப்படம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்த தெளிவான போக்கு இல்லை.

ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவிக்கு வர மறுத்துவிட்டால், உட்கட்சித் தேர்தல் நடத்தி முடிக்கும்வரை அதாவது 2022-ம் ஆண்டுவரை சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என்று சோனியா காந்தியின் விசுவாசிகள் வலியுறுத்தலாம் எனத் தெரிகிறது. இருப்பினும், ஒருதரப்பினர் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்கும் முயற்சியில்அவரை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியில் கடைசியாக 2000-ம் ஆண்டு நடந்த உட்கட்சித் தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு முன்பாக 1997-ம் ஆண்டு சீதாராம் சேகரியின் தலைவராக இருந்தபோது நடந்தது.

காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்டி, காரியக்கமிட்டியில் உள்ள 25 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் நிர்வாகிகளால், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மீதமுள்ள உறுப்பினர்களை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவர் நியமிப்பார்.

மேலும், வரும் 29-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் எந்தெந்த விவகாரங்களை எழுப்பலாம், மத்திய அரசுக்கு எவ்வாறு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்தும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x