

மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பாஜகவுக்கு நன்றி என்று பாஜகவில் இணைந்துள்ள ஆதித்யா பிர்லா குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் ரஞ்சன் பானர்ஜி கொல்கத்தாவில் பாஜகவில் சேர்ந்தார்.
மேற்கு வங்கத்தில் பாஜக வலிமையாக காலூன்றுவதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மம்தா பானர்ஜி ஆட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்எல்ஏக்களை பாஜக தன் வசம் இழுத்து வருகிறது. இது தவிர பல்வேறு தொழிலதிபர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களை நடத்திவரும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து ரஞ்சன் பானர்ஜி ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
மாநில மக்களுக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பை வழங்கிய பாஜகவுக்கு நான் நன்றி கூறுகிறேன். நாம் இங்கு தொழில்களைக் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. அப்போதுதான் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும.
மேற்கு வங்கத்தின் முழு சூழலும் மாற்றப்பட வேண்டும். தொழில்களே இங்கு வரவில்லை. மேற்கு வங்கத்தை முதன்மையான மாநிலமாக உருவாக வேண்டுமென நான் விரும்புகிறேன், எதில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக நான் செயல்படுவேன். இப்போது உண்மையான வேலைகளைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இம்மாநிலத்தில் தொழில்களை உருவாக்க வேண்டும். அதற்காக எங்கள் நிறுவனத்தின் யூனிட்களை அமைப்பதற்கும் எங்கள் தொழில்கட்டமைப்புகளைஊக்குவிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு ரஞ்சன் பானர்ஜி தெரிவித்தார்.