

மணிப்பூர், திரிபுரா, மேகாலயா மாநிலங்கள் உதயமான நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி மூன்று மாநில மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மணிப்பூர், திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களும் ஜனவரி 21 அன்று 1972ஆம் ஆண்டு தனித்தனி மாநிலங்களாக உதயமாயின.
இதே தினத்தில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் நினைவுகூர்கின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது வெவ்வேறு ட்விட்டர் பதிவுகளில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:
"மணிப்பூர் மக்களுக்கு மாநில தின வாழ்த்துக்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு மணிப்பூர் அளித்த பங்களிப்பு குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. இம் மாநிலமானது புதுமை மற்றும் விளையாட்டு திறமைகளின் சக்தியாக விளங்குகிறது.
திரிபுரா மக்களுக்கு அவர்களின் மாநில தினத்தின் சிறப்பு நிகழ்வில் வாழ்த்துக்கள். திரிபுரா மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் அன்புடன் பழகும் இயல்பு இந்தியா முழுவதும் போற்றப்படுகிறது. பல்வேறு துறைகளில் மாநிலம் மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதே வளர்ச்சி வேகம் தொடரட்டும்.''
கருணை மற்றும் சகோதரத்துவ நேசத்திற்கு பெயர் பெற்ற மேகாலயா மக்களுக்கு வாழ்த்துக்கள். மேகாலயாவைச் சேர்ந்த இளைஞர்கள் ஆக்கபூர்வமாக உழைக்க ஆர்வமுள்ளவர்களாகவும் உள்ளனர். வரவிருக்கும் காலங்களில் மேகாலயா மாநிலம் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டட்டும்.’’
இவ்வாறு பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.