

லாப நோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களும் நிகர்நிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இனி புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கலாம். அதற்கேற்ப இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
நாடு முழுவதிலும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள் நடத்த குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இதன்படி, பதிவு பெற்ற அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் பிரிவு 8-ன் கீழ் (லாப நோக்கமற்ற) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அவற்றை தொடங்கி நடத்தலாம். இது லாப நோக்க மற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மற்றவர் களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், எம்சிஐ சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான விதிமுறைகளில் முக்கிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திருத்தம் கடந்த 2019-ம் ஆண்டு மே 14-ம் தேதியில் அரசு பதிவேட்டிலும் வெளியாகி உள்ளது.
இதன்படி, மருத்துவக் கல்லூரிகளை பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள், சங்கங்கள் அல்லதுநிறுவனங்கள் தொடங்கலாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது லாப நோக்கமற்ற என்பதற்கான பிரிவு- 8 அப்பட்டியலில் இருந்து நீக்கப்பட் டுள்ளது. இதனால் லாப நோக்குடன் செயல்படும் தனியார் நிறுவனங்களும் மருத்துவக் கல்லூரிகளை நடத்த தற்போது வழி செய்யப்பட்டுள்ளது.
எம்சிஐ சட்ட விதிமுறைகளில் செய்யப்பட்ட இம்மாற்றங்களும் தனியார் நிறுவனங்கள் கல்லூரிகள் தொடங்குவதற்கு போதுமானதாக இல்லை எனக் கருதப்பட்டது. இதற்கு அந்த நிறுவனங்கள் தொடங்கும் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை எந்த மருத்துவப் பல்கலைக்கழகம் மூலமாக தருவது என்ற சிக்கலும் எழுந்தது.
இச்சிக்கலை தீர்க்க, யுஜிசியின் நிகர்நிலைப் பல்கலைக்கழக விதிமுறையிலும் ஒரு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் கடந்த 2020, நவம்பர் 19-ம் தேதியிட்ட அரசு பதிவேட்டில் வெளியாகியுள்ளது.
இதன்படி ஒரு நிகர்நிலைமருத்துவப் பல்கலைக்கழகத் துடன் தனியார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். பிறகு அந்த நிறுவனத்தின் மருத்துவக் கல்லூரிக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் அளிக்கும். இந்த மருத்துவக் கல்லூரி நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே அமைந்தாலும் அது, அதற்கு அங்கீகாரம் அளித்த நிகர்நிலைப் பல்கலையின் கிளையாகவே கருதப்படும்.
அதாவது ஏற்கெனவே செயல்பட்டு வரும் மருத்துவமனை களுடன் வகுப்புகளுக்கான கட்டிடம் அமைத்து, புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும் வாய்ப்புகள் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு முக்கிய மாற்றங்களால் இனி நாடு முழுவதிலும் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பதுடன் மாணவர் சேர்க்கையும் அதிக ரிக்கும்.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தருமபுரி தொகுதி திமுக எம்.பி.யும் மத்திய சுகாதார துறைக்கான நாடாளுமன்ற குழுஉறுப்பினருமான எஸ்.செந்தில்குமார் கூறும்போது, “இந்த திருத்தங்களின் மூலம் பள்ளிகளை போல் மருத்துவக் கல்லூரிகளும்வியாபாரமயம் ஆக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படும் நிலையில்,இந்த புதிய முடிவு பாதிப்பைஅதிகரிக்கும். இந்த திருத்தங்களை இரு அவைகளிலும் முன்வைக்காமல் அமல்படுத்தக்கூடாது என நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்” என்றார்.