

அதிகாரபூர்வமான ராணுவ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 26, 2019 அன்று, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவின் பயிற்சி முகாம் மீது இந்தியா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதுகுறித்து முன்கூட்டியே வாட்ஸ்அப்பில் ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி இன்னொருவருடனான உரையாடலில் இடம்பெற்று இத்தகவல் சமூக ஊடகங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது..
இதுகுறித்து டெல்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி கூறியதாவது:
''2019ல் பாலகோட்டில் நடந்த வான்வழித் தாக்குதல் குறித்த தகவல் கசிவு குறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.
ராணுவ நடவடிக்கைகளின் அதிகாரபூர்வ ரகசியத்தை கசியவிடுவது தேசத்துரோகம். இந்த கசிவுக்கு யார் காரணம் என்றாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் கருணை காட்டப்பட தகுதியற்றவர்கள்"
இவ்வாறு ஏ.கே.ஆண்டனி தெரிவித்தார்.