

திருப்பதி ஏழுமலையானை வரும்23-ம் தேதியிலிருந்து சர்வ தரிசனம் மூலம் தரிசனம் செய்வதற்கான டோக்கன் வழங்கும் பணிதிருப்பதியில் நேற்று தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையானை சாமானிய பக்தர்கள் பெரும்பாலும் சர்வ தரிசனம் வழியாகவே சென்று தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் நடைபாதை வழியாக சென்று திவ்ய தரிசனம் முறையிலும் இவர்கள் தரிசனம் செய்கின்றனர்.
இதில் சர்வ தரிசன டோக்கன் திருப்பதியில் நிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் ஜனவரி 22-ம் தேதி வரையிலான டோக்கன் ஏற்கெனவே விநியோகம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், 23-ம் தேதியிலிருந்து சுவாமியை சர்வதரிசன முறையில் தரிசிக்க டோக்கன் வழங்கும் பணி திருப்பதியில் நேற்று தொடங்கியது.
இதனிடையே திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 26-ம் தேதி குடியரசு தினம் ஆகிய விடுமுறை நாட்கள் வருவதால், பக்தர்கள் அதற்கு தகுந்தாற்போல் தங்களது திருமலையாத்திரையை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளது.