Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

ம.பி.யில் பெண்ணை ஏமாற்றி மதம் மாற்ற முயற்சி: திருமணமான நபர் ‘லவ் ஜிகாத்’ சட்டத்தின் கீழ் கைது

மத்திய பிரதேசத்தில் மதம் மாற்றும்நோக்கத்தில் பெண்ணை 4 ஆண்டுகளாக ஏமாற்றிய ஏற்கெனவே திருமணமான நபர் ‘லவ் ஜிகாத்’சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்துப் பெண்களை மதம் மாற்றும் நோக்கத்தில் சில முஸ்லிம் ஆண்கள் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் ஏமாற்றி திருமணம் செய்துகொள்வதாக கேரளா, உ.பி., மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. மதம் மாற்றும் நோக்கத்துடன் லவ் ஜிகாத் என்ற பெயரில் திருமணங்களை தடுக்க மத்திய பிரதேச அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டுவந்தது.

பர்வானியைச் சேர்ந்த 22 வயதான பெண் ஒருவர் சோஹைல் மன்சுரி என்பவரை பல்சுட் என்றஇடத்தில் ஒரு விழாவில் சந்தித்துள்ளார். அந்தப் பெண்ணிடம் தன்னைப் பற்றிய விவரங்களை மறைத்து, தனது பெயர் சன்னி என்றும் அந்தப் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் சோஹைல்மன்சூரி பொய் சொல்லியுள்ளார். அதை நம்பிய பெண்ணும்சோஹைலை காதலித்துள்ளார். திடீரென ஒருநாள் தன்னைப் பற்றிய விவரங்களை தெரிவித்து தனது மதத்துக்கு மாறுமாறும் அப்போதுதான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் மிரட்டியசோஹைல், மதம் மாற மறுத்ததால் அந்தப் பெண்ணை பலமுறைஅடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், சோஹைல் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் போலீஸில் சோஹைல் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில்,லவ் ஜிகாத்தை தடுக்கும் சட்டமான, மத்திய பிரதேச மத சுதந்திர அவசர சட்டம் 2020-ன் கீழ் சோஹைலை கைது செய்தனர். பாலியல் பலாத்காரம், மிரட்டல், ஏமாற்றுதல், துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ம.பி.யில் லவ் ஜிகாத்சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. ஜாமீனில் வெளிவர முடியாத இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்க முடியும்.

டெல்லியில் முத்தலாக் கொடுமை

இதனிடையே, டெல்லியைச் சேர்ந்த ஹியூமா ஹாசிம் என்ற பெண் டெல்லி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தொழில் நிறுவனத்தின் இயக்குநரான தனது கணவர் தனிஷ் ஹாசிம் என்பவருடன் தனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்திருமணமாகி அவர் மூலம் 20 மற்றும் 18 வயதில் இரண்டு பெண்கள் இருப்பதாகவும் ஆண் குழந்தை இல்லாததால் தன்னையும் தன் மகள்களையும் தனிஷ் ஹாசிம் அடித்து கொடுமைப்படுத்தி விரட்டியதோடு, தன்னை முத்தலாக் கூறி சட்ட விரோதமாக விவாகரத்து செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனிஷ் ஹாசிமின் அரசியல் செல்வாக்கு காரணமாக போலீஸார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாகவும் புகாரை வாபஸ் பெறும்படி தான் மிரட்டப்படுவதாகவும் கூறியுள்ளார். முத்தலாக் சட்ட விரோதம் என்று மத்திய அரசு ஏற்கெனவே சட்டம் கொண்டுவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x