

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவினர், முதல்முறையாக விவசாயிகளை நாளை (ஜன.21) சந்திக்க உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுடன் மத்திய அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 வேளாண் சட்டங் களுக்கும் இடைக்கால தடை விதித்தது. மேலும் இந்த சட்டங்களை ஆய்வு செய்ய 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அமைத்ததது. இடைக்கால தடையை வரவேற்ற விவசாயிகள், ஆய்வுக் குழுவை நிராகரிப்பதாக அறிவித்தனர். குழுவின் உறுப்பினர்கள் நால்வரும் வேளாண் சட்டங்களை வெளிப்படையாக ஆதரித்தவர்கள் என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து 4 உறுப்பினர்களின் ஒருவரான புபீந்தர் சிங் மான், குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஷேத்காரி சங்கதனா என்ற விவசாய அமைப்பின் தலைவர் அனில் கன்வத், வேளாண் பொருளாதார நிபுணர்கள் அசோக் குலாட்டி, பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் டெல்லியில் நேற்று முதல்முறையாக கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், குழுவின் உறுப்பினர் அனில் கன்வத் கூறும்போது, ‘‘புபீந்தர் சிங்குக்கு பதிலாக புதிய உறுப்பினரை உச்ச நீதிமன்றம் நியமிக்காவிடில் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட உறுப் பினர்களான நாங்கள் எங்கள் பணியை தொடருவோம். வரும் வியாழக்கிழமை (ஜன.21) முதல் எங்கள் குழு செயல்படத் தொடங்கும். எங்களை நேரில் சந்திக்க விரும்பும் விவசாய அமைப்புகளுடன் அன்று ஆலோசனை நடத்தப்படும். எங்களை நேரில் சந்திக்க முடியாதவர்களுடன் வீடியோ கான் பரன்ஸ் மூலம் ஆலோசனை பெறப் படும். எங்களுடன் அரசு பேச விரும் பினால் அதை நாங்கள் வரவேற் கிறோம். அரசின் கருத்தையும் நாங்கள் கேட்போம். போராட்டத்தில் ஈடுபட் டுள்ள விவசாயிகளை எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு இணங்கச் செய் வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதற்கு எங்களால் இயன்றவரை முயற்சி செய்வோம்” என்றார்.
இதனிடையே, விவசாயிகளின் போராட்டம் 55-வது நாளாக நேற்றும் நீடித்தது. விவசாயிகள் – மத்திய அரசு இடையிலான 10-வது சுற்று பேச்சு வார்த்தை நேற்று நடப்பதாக இருந்தது. ஆனால், இதை மத்திய அரசு தள்ளி வைத்தது. அதன்படி, இந்த பேச்சு வார்த்தை இன்று நடக்க உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களில் தங்களுக்கு பாதகமாக உள்ளவற்றை விவசாயிகள் தெரிவிப்பார்கள் என நம்புவதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.