Published : 14 Oct 2015 02:05 PM
Last Updated : 14 Oct 2015 02:05 PM

விவசாயிகளே, தலை நிமிர்ந்து நில்லுங்கள்: தசராவைத் தொடங்கி வைத்த கம்பீர விவசாயி

சரியான அணுகுமுறையால் நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொண்ட விவசாயி புட்டையா, தன் சகாக்கள் மத்தியில் தனித்து நிற்கிறார்.

குத்தகை விவசாயி ஒருவரின் மகனான புட்டையா இன்று வெற்றிகரமான விவசாயி ஆக மாறி, மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார். பிரபலமல்லாத ஒருவர், இவ்விழாவைத் தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை. இதன் மூலம் தனது சக விவசாய நண்பர்களுக்கு எடுத்துக்காட்டாக மாறி இருக்கிறார்.

மைசூரு, ஹெக்காடாதேவனா பகுதியைச் சேர்ந்த 67 வயதான புட்டையா செவ்வாய்க்கிழமை சாமுண்டி மலையில் தன் வாழ்க்கைப் பயணம் குறித்துப் பேசினார்.

"விவசாயிகள் சிறு, குறு மற்றும் நீண்ட கால பயிர்கள் மூலம், தங்களின் வருமானத்தை நிலையாக வைத்திருக்க வேண்டும். அதோடு, தினசரி விவசாயம் மூலம், தினசரி வருமானத்தையும் ஈட்ட வேண்டும். என்னுடைய வெற்றிக்குப் பின்னால், தினசரி, வார, மாத, மூன்று மாத, ஆறு மாத மற்றும் வருட வருமானம் உள்ளடங்கி இருக்கிறது.

பால் விற்பனை மூலம் தினசரியும், காய்கறிகள் விற்பனை மூலம் வாரம் ஒரு முறையும், தேங்காய் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் வருமானம் ஈட்டுகிறேன். ஆறு மாதத்துக்கு ஒரு முறை பருப்பு வகைகள் மூலமும் (குறிப்பாக அவரை), வருடத்துக்கு ஒருதடவை கரும்பு, மஞ்சள் மற்றும் இதர பயிர்கள் மூலமும் வருமானம் வருகிறது. இவற்றின் மூலம், எனது குடும்பத்துக்கு நிலையான, சீரான வருமானத்தை என்னால் சம்பாதிக்க முடிகிறது.

இவையோடு, செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறேன். அவற்றின் மூலம் ஆண்டுதோறும் 5-ல் இருந்து 6 லட்சம் வரை கிடைக்கிறது" என்றார்.

ஒரு முறைகூட கடன் வாங்கியதில்லை

ஆச்சரியமாக, புட்டையா இதுவரை விவசாயத்துக்காக ஒரு தடவைகூட கடன் வாங்கியதில்லை.

வருடத்துக்கு ஒன்றாக அவருடைய எட்டு ஆழ்துளைக் கிணறுகளும் வற்றிப் போனபோது கூட, அவர் கடன் வாங்கவில்லை.

நான்கு ஏக்கரில் தனது விவசாயத்தைத் தொடங்கியவர், இப்போது நாற்பது ஏக்கர்கள் நிலத்துக்குச் சொந்தக்காரராக இருக்கிறார்.

வெற்றியாளராக நடைபோடும் புட்டையா தனது சக விவசாயிகளுக்குச் சொல்லும் செய்தி இதுதான்

"ஒருங்கிணைந்த விவசாயத்தைக் கையிலெடுங்கள்; தைரியத்தைக் கைவிடாதீர்கள். இடையூறுகளைச் சந்திக்கத் தேவையான தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தற்கொலை எந்தக் காலத்திலும், உங்களின் பிரச்சனைக்குத் தீர்வாகாது".

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x