Last Updated : 19 Jan, 2021 12:08 PM

 

Published : 19 Jan 2021 12:08 PM
Last Updated : 19 Jan 2021 12:08 PM

குஜராத் சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் மோடி தேர்வு: 2-வது பிரதமர் எனும் பெருமையைப் பெற்றார்

பிரதமர் மோடி: கோப்புப் படம்.

அகமதாபாத்

குஜராத்தில் உள்ள கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பின், சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராகப் பொறுப்பேற்கும் 2-வது பிரதமர் எனும் பெருமையை மோடி பெற்றுள்ளார்.

சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரபாஸ் நகரில் புகழ்பெற்ற சோம்நாத் கோயில் அமைந்துள்ளது. தற்போது இந்தக் கோயிலின் ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் மறைந்ததைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக தலைவர் இல்லாமல் செயல்பட்டு வந்தது. சோம்நாத் கோயில் அறக்கட்டளைத் தலைவராக கேசுபாய் படேல், கடந்த 2004 முதல் 2020-ம் ஆண்டுவரை செயல்பட்டு வந்தார்.

கேசுபாய் படேல் மறைவைத் தொடர்ந்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய நேற்று அறக்கட்டளையின் ஆண்டுக் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தின் முடிவில், சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக ஒருமனதாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “குஜராத் சோம்நாத் அறக்கட்டளையின் தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டு, சிறப்பாகச் செயல்பட்டுவரும் அறக்கட்டளையைப் பாராட்டியுள்ளார்.

கோயிலின் வசதிகள், உள்கட்டமைப்பு, தங்கும் வசதிகள், பக்தர்கள் எளிதாக வந்து செல்லும் போக்குவரத்து வசதிகளை வரும் காலங்களில் சிறப்பாக மேம்படுத்துவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

சோம்நாத் கோயிலின் அறக்கட்டளை நிர்வாகிகளாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜே.டி.பார்மர், தொழிலதிபர் ஹர்ஸவர்தன் நியோஷியா ஆகியோரும் செயலாளராக பி.கே. லாஹேரியும் உள்ளனர்.

அறக்கட்டளையின் செயலாளர் பி.கே. லாஹேரி கூறுகையில், “சோம்நாத் அறக்கட்டளையின் அடுத்த தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவிக்கு மோடியின் பெயரை அமித் ஷா முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். விரைவில் அறக்கட்டளை சார்பில் அடுத்தகட்டக் கூட்டம் நடத்தப்பட்டு, எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

சோம்நாத் அறக்கட்டளையின் 8-வது தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன், ஜாம்சாஹேப், திக்விஜய் சிங், கனியாலால் முன்ஷி, ஜெய் கிருஷ்ணா ஹரி வல்லபா, தினேஷ்பாய் ஷா, பிரசான்வதன் மேத்தா, தேசாய், கேசுபாய் படேல் ஆகியோர் தலைவராக இருந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x