ராமர் கோயில் கட்ட ரூ.1.11 லட்சம் நன்கொடை: விஎச்பி அமைப்பின் கடந்த கால நன்கொடை கணக்குகளை வெளியிடுங்கள்: பிரதமர் மோடிக்கு திக்விஜய் சிங் 2 பக்க கடிதம்

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பிரதமர் மோடி : கோப்புப்படம்
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பிரதமர் மோடி : கோப்புப்படம்
Updated on
2 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1.11 லட்சம் நன்கொடையாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வழங்கியுள்ளார். இந்த நன்கொடைக்கான காசோலையை பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்து, 2 பக்க கடிதமும் எழுதியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ராமர் கோயில் கட்டுவதற்கு பொதுமக்கள் நன்கொடை வழங்கலாம் என்று கோயில் கட்டுமானத்தை நிர்வகிக்கும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இதற்கிடையே விஸ்வ இந்து பரிஷத் அமைப்பும் தனியாக நன்கொடை வசூலிக்கும் பணியில் கடந்த 15-ம் தேதி முதல் ஈடுபட்டுள்ளது. 44 நாட்கள் பிரச்சாரம் செய்து ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் பணியில் விஎச்பி அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ராமர் கோயில் கட்டுவதற்காக தன்னுடைய ரூ.1.11 லட்சம் பணத்தை நன்கொடையாக பிரதமர் மோடிக்கு காசோலையாக அனுப்பியுள்ளார். அதனுடன் சேர்த்து 2 பக்க கடிதத்தையும் இணைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் எந்த வங்கியில், வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனும் விவரம் இதுவரை எனக்குத் தெரியவில்லை. ஆதலால் ராமர் கோயில் கட்டுவதற்காக எனது சிறிய பங்களிப்பாக ரூ.1.11 லட்சத்துக்கான காசோலையை உங்களுக்கு (பிரதமர் மோடி) அனுப்பி இருக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல் கடந்த காலங்களில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வசூலித்தது அந்த பணத்தை என்ன செய்தார்கள், அதன் கணக்குவிவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும்.

ராமர் கோயிலுக்கு நன்கொடைவசூலிக்கும் பணியில் 44 நாட்கள் பிரச்சாரம் செய்யப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 15-ம் தேதி முதல் அந்த அமைப்பினர் நன்கொடை வசூலித்து வருகின்றனர்.

நன்கொடை வசூலிக்கும் போது, விஸ்வ இந்து அமைப்பினர் கையில் கம்புகளுடனும், கத்திகளுடன் செல்கிறார்கள். நன்கொடை வசூலிக்கும் செல்லும் இடங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக கோஷமிடுவது மதம்சார்ந்த விழாவாக இருக்க முடியாது.

இதுபோன்ற செயல்பாடுகள் சானதன தர்மத்துக்கு விரோதமானது. இதுபோன்ற சம்பவங்களால் மத்தியப்பிரதேச மாநிலத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து, சமூக நல்லிணத்துக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன், இந்தூர், மண்டாசூர் மாவட்டங்களில் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் பணியில் இருந்தபோது, மதரீதியான மோதல் வெடித்தது. மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நிச்சயம் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு விரோதமாக இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதுபோன்ற நிதிதிரட்டும், நன்கொடை வசூலிக்கும் பணியில், கையில் ஆயுதங்களுடன் பிற மதத்தினரை எரிச்சலூட்டும் வகையில், மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் நன்கொடை வசூலிக்கும் பணியில் இருப்போருக்கு தடை விதிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு நாட்டின் பிரதமராகிய நீங்கள் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in