Published : 19 Jan 2021 09:44 AM
Last Updated : 19 Jan 2021 09:44 AM

கோவிட்; பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவின் செயல்பாடு சிறப்பானது: வெங்கய்ய நாயுடு பெருமிதம்

புதுடெல்லி

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்திலும், பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையிலும், வளர்ந்த நாடுகளைவிட இந்தியா நன்றாக செயல்பட்டுள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

பணியாற்றும் இடத்தில் தவறுகளை வெளிப்படுத்தும் நடைமுறையை அனைத்து பெரு நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும் எனவும், தகவல் அளிப்பவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

பங்குதாரர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை அதிகரிக்க, பெரு நிறுவன நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் உறுதி செய்வது முக்கியம். மக்கள் பணம் பாதுகாக்கப்பட வேண்டும். முறைகேடு வாய்ப்பைக் குறைக்க, நிர்வாக அமைப்பு சரியாக இருக்க வேண்டும்.

சிலரது செயல்பாடுகள், இந்தியத் தொழிலுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. பெருநிறுவன நிர்வாகத்தில், இளம் கம்பெனி செயலாளர்களான உங்களின் வழிகாட்டுதல் மூலம், நெறிமுறையையும், நம்பகத்தன்மைமையையும் உறுதி செய்ய வேண்டும். இந்தத் தொழிலை ஒரு இயக்கமாக மேற்கொள்ள வேண்டும்.

வரும் மாதங்களில், பொருளாதாரம் மீண்டும் மேம்படும். இதை வலுவாக்குவதில் இந்திய நிறுவனங்கள் முன்னிலை வகிக்க வேண்டும்.

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்திலும், பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையிலும், வளர்ந்த நாடுகளைவிட இந்தியா நன்றாக செயல்பட்டுள்ளது. தொற்றையும், பொருளாதார பாதிப்புகளையும் எதிர்கொள்வதில் இந்தியா திடமான நடவடிக்கைகளை எடுத்ததாக சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) தலைவர் கிரிஸ்டாலினா ஜார்ஜியாவா கூறினார்.

தற்சார்பு நாடாக மாறும் பயணத்தில், இந்தியா முன்னோக்கிச் செல்வது போல், பொருளாதாரத்தை மீட்பதில் கம்பெனி செயலாளர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். உயர்ந்த தார்மீக மதிப்புகளையும், நெறிமுறைகளையும் நிலைநிறுத்துவதில் கம்பெனி செயலாளர்கள் உறுதியாக இருக்க வேண்டும். நீதியின் பாதையிலிருந்து நீங்கள் ஒருபோதும் விலகக்கூடாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x