குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் சுரிநாம் அதிபரின் வருகை இருதரப்பு உறவை பலப்படுத்தும்: கலாச்சார உறவுக்கும் புத்துயிர் அளிக்கும் என நம்பிக்கை

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் சுரிநாம் அதிபரின் வருகை இருதரப்பு உறவை பலப்படுத்தும்: கலாச்சார உறவுக்கும் புத்துயிர் அளிக்கும் என நம்பிக்கை
Updated on
1 min read

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கும் சுரிநாம் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகியின் இந்திய வருகை இரு நாடுகளிடையே உறவை பலப்படுத்துவதோடு இருதரப்பு கலாச்சார உறவுக்கும் புத்துயிர் அளிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்திய குடியரசு தின விழாவரும் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், லத்தீன் அமெரிக்காவின் சிறியநாடான சுரிநாம் அதிபரும் இந்தியவம்சாவளியைச் சேர்ந்தவருமான சந்திரிகா பெர்சாத் சந்தோகி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்தியாவுக்கும் சுரிநாமுக்கும் இடையே வரலாற்று, கலாச்சார ரீதியாக தொடர்புகள் உண்டு. சுரிநாமின் மக்கள் தொகையில் 27 சதவீதம் பேர் இந்தியர்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள். இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் படித்தவர்கள். அவர்கள் டாக்டர்கள், இன்ஜினியர்கள், நர்சுகளாக பணியாற்றி வருகின்றனர். 1873-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியின்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதன்முதலில் இந்தியர்கள் சுரிநாமுக்கு கப்பல்மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். 1916-ம் ஆண்டு வரை 64 முறைகப்பல் மூலம் 34,000 இந்தியர்கள் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுரிநாமில் வசிக்கும் இந்தியர்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். அவர்கள் இந்திய நாட்டுப்புற இசையை பாடி வருவதோடு போஜ்புரி, அவாதி, மைதிலி மற்றும் மகாஹி மொழிகளைப் பேசி வருகின்றனர்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி கடந்த வாரம் தொடக்கி வைத்தார். அதில் சந்திரிகாபெர்சாத் சந்தோகி தலைமை விருந்தினராக காணொலி மூலம் கலந்து கொண்டார். போஜ்புரி மொழியில் பேசிய அவர், இந்தியாவில் இருந்து சுரிநாம் வரும் இந்தியர்களுக்கு விசா அனுமதியை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அவருக்கும் நியூசிலாந்து அமைச்சரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கும் ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மைதிலி மொழி

சுரிநாமில் வசிக்கும் இந்தியர்கள் பேசும் மொழிகளில் ‘மைதிலி’ மொழியும் ஒன்று. நேபாளத்தை ஒட்டி அமைந்துள்ள பிஹாரின் வடக்குப் பகுதியில் ‘மைதிலி’ மொழியை குறைந்த அளவிலான மக்கள் பேசி வருகின்றனர். நேபாளத்தில் உள்ள மிதிலாபுரி என்று வழங்கப்பட்ட மிதிலையில்தான் சீதாதேவி பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மிதிலா தேசம் என்று வழங்கப்பட்ட அங்கிருந்துதான் மைதிலி மொழி உருவானது. அதனால்தான், நேபாள எல்லையையொட்டிய பிஹாரில் இம்மொழி பரவியுள்ளது. இது இந்திய - நேபாள கலாச்சார உறவு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் சுரிநாமுக்கும் உள்ள வரலாற்று தொடர்பை விளக்குவதாகவும் உள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு சுரிநாம் அதிபரின் இந்திய வருகை இருதரப்பு உறவை பலப்படுத்துவதோடு. வரலாற்று, கலாச்சார ரீதியான உறவுகளுக்கும் புத்துயிர் அளிக்கும் என்று கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in