Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

அருணாச்சல பிரதேச எல்லையில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா

புதுடெல்லி

அருணாச்சல பிரதேச எல்லையில்புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. இது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ.தொலைவுக்கு இந்திய, சீனா எல்லைப் பகுதி நீள்கிறது. எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த 1962-ம் ஆண்டில் லடாக் மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. கடந்த 2017 ஜூன்மாதம் சிக்கிம், பூடான், சீன எல்லைப் பகுதிகள் சந்திக்கும் டோக்லாமில் சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சுமார் 72 நாட்களுக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர்.

கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் லடாக் எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. லடாக் எல்லை பிரச்சினை இன்னமும் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.

இந்நிலையில் வடகிழக்கில் சிக்கிம் மாநிலம், டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் சீன ராணுவம் புதிதாக பதுங்கு குழிகளை அமைத்திருப்பது கடந்த நவம்பரில் செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியில் இருந்து 4.5 கி.மீ. தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. சுபன்மாவட்டம், சாரி சூ நதிக் கரையோரம் அமைக்கப்பட்டுள்ள இந்தகிராமத்தில் 101 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருணாச்சல பிரதேச வட்டாரங்கள் கூறும்போது, "இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 60 கி.மீ.பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. தற்போது சீனா உருவாக்கியுள்ள புதிய கிராமம், இந்திய எல்லைக்குள்ளேயே அமைந்திருக்கிறது. எனினும் இப்பகுதி கடந்த 1959-ம் ஆண்டு முதல் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது" என்று தெரிவித்தன.

மத்திய அரசு அறிக்கை

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய எல்லைப் பகுதிகளை ஒட்டி சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகதகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த விவகாரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். நாட்டின் இறையாண்மை, நிலப்பகுதிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப் பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x