Last Updated : 06 Oct, 2015 07:14 AM

 

Published : 06 Oct 2015 07:14 AM
Last Updated : 06 Oct 2015 07:14 AM

நரேந்திர மோடி, ஏஞ்சலா மெர்க்கல் சந்திப்பு: 18 ஒப்பந்தங்கள் கையெழுத்து - சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஜெர்மனி ரூ.7,300 கோடி நிதி

இந்தியாவில் தொழில் தொடங்க ஜெர்மனி நிறுவனங்களுக்கு விரை வாக அனுமதி வழங்குவது, இந்திய சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஜெர்மனி ரூ.7,300 கோடி நிதியுதவி வழங்குவது உட்பட 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகள் இடையே நேற்று கையெழுத்தாகின.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அரசுமுறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் உள்ள ஹைதரா பாத் இல்லத்தில் பிரதமர் நரேந் திர மோடியை மதியம் சந்தித் தார். அங்கு இரு நாட்டு அரசுகள் இடையிலான 3-வது ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மெர்க்கல் தலைமையிலான குழுவினரும் மோடி தலைமை யிலான குழுவினரும் இருதரப்பு வர்த்தக உறவு குறித்து ஆலோ சனை நடத்தினர். இரு தலைவர் களும் தனியாகவும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது, ராணுவ தளவாட உற்பத்தி, நவீன தொழில்நுட்ப வர்த்தகம், உளவு தகவல் சேகரிப்பு, ரயில்வே, தீவிரவாதம், அடிப்படைவாதத்தை ஒடுக்குதல், தூய்மையான எரிசக்தி உற்பத்தி தொடர்பாக 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குறிப்பாக, ஜெர்மனி நிறுவனங் கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் விரைவாக அனுமதி வழங்க வகை செய்யும் ஒப்பந்தமும் இதில் அடங்கும். இது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைமுறைக்கு வரும். இதன்மூலம் முதலீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, இந்தியாவில் மேற்கொள் ளப்படும் சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.7,300 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது. இதை மீண்டும் தொடங்குவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள், சர்வதேச சட்டத்தின்படி சர்வதேச கடல் பகுதியில் சுதந்திரமான நீர்வழி போக்குவரத்தை உறுதி செய்வது, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவது, பருவநிலை மாற்றத்துக்கு தீர்வு காண்பது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு பிறகு மோடியும் ஏஞ்சலா மெர்க்கலும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இரு நாடுகள் இடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் உறுதுணையாக இருக்கும் என இருவரும் நம்பிக்கை தெரிவித் தனர். செய்தியாளர் சந்திப்பின் போது மோடி கூறியதாவது:

நமது பொருளாதார மாற்றம் தொடர்பான தொலைநோக்குப் பார்வை இலக்கை எட்டுவதற்கு ஜெர்மனி நம்முடைய இயற்கையான கூட்டாளியாக விளங்குகிறது.

பொதுவாக உலக நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை பலப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், ஏராளமான வாய்ப்புகளும் சவால்களும் நிறைந்த உலகில் மனிதாபிமானம், அமைதி, நேர்மை, நீடித்த எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவும் ஜெர்மனியும் வலிமையான கூட்டாளியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

இரு நாடுகள் இடையே வரும் காலங்களில், உற்பத்தி, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் வர்த்தக, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீடு ஆகியவை அதிகரிக்கும்.

இந்தியாவில் 1,600 ஜெர்மனி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இது மேலும் அதிகரித்து வருவதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இரு நாடுகளும் முக்கிய பங்காற்றுகின்றன.

ஸ்மார்ட் சிட்டி, கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், கழிவு மேலாண்மை திட்டம் உள்ளிட்டவற்றில் ஜெர்மனியின் ஒத்துழைப்பு மற்றும் உதவி உறுதியான நிலையை எட்டி உள்ளது. இவ்வாறு மோடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x