

பெங்களூருவில் பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களை ஆதார் அட்டையைக் கொண்டு வருமாறும், இல்லையெனில் உடனடியாக பதிவு செய்யவும் கட்டாயப்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
பள்ளிச்சுற்றுலாவுக்கு மாணவர்களை ஆதார் அட்டையைக் கொண்டு வரச்சொல்லி சில பள்ளிகள் வலியுறுத்துகின்றன, மேலும், பள்ளிக்கூடம் சார்ந்த வேலையை சமர்ப்பிக்கவும் ஆதார் எண் சில பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்திய பின்பும், பள்ளிகளில் இந்த புதிய நடைமுறை பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களை கட்டாயப்படுத்துவதோடு, பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு ஆதார் அட்டைப் பெற்று தரும் நோக்கத்துடன் சிறப்பு முகாம்களும் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி இந்நடவடிக்கைகளை பெங்களூர் பள்ளிக்கூடங்கள் மேற்கொண்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தின் கல்வித்துறை போர்க்கால அடிப்படையில் மாணவர்களுக்கான ஆதார் அட்டை நடைமுறையை முடித்து, அக்டோபர் 17-க்குள் அனைத்து மாணவர்களின் ஆதார் அட்டை விவரங்களை சமர்ப்பிக்க மத்திய மனிதவளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கல்வி சார்ந்த திறன்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 17 இலக்க ஆதார் எண் அவசியம் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் வலியுறுத்தி வந்துள்ளது.
அதாவது ஆதார் எண்-ஐ ஒரு பதிலி ரோல் நம்பராகவே பயன்படுத்த நீண்ட காலத் திட்டம் உள்ளதாம்.
விரைவில் மற்ற மாநிலங்களும் இதனைப் பின்பற்றலாம் என்று கருதப்படுகிறது.