

குடியுரசு தின நாள் அணிவகுப்புக்கு இடையூறு இல்லாத வகையில் டெல்லி புறநகர்ப் பகுதி சாலையில்தான் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு இருக்கும். டிராக்டர் அணிவகுப்பு நடத்துவது அரசியலமைப்பு உரிமை என விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 50 நாட்களாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து, சிக்கலைத் தீர்க்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 9 கட்டப் பேச்சுவார்த்தை நடந்தும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதற்கிடையே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி குடியரசு தின அணிவகுப்பு நடக்கும்போது, விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி டெல்லியில் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி டெல்லி போலீஸார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அது விசாரணையில் இருக்கிறது.
இந்தச் சூழலில், விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்த அரசியலமைப்பு ரீதியாக உரிமை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளனர்.
பாரதிய கிசான் யூனியன் பஞ்சாப் பொதுச்செயலாலர் பரம்ஜித் சிங் கூறுகையில், “டெல்லி ராஜபாதையில் விவசாயிகள் யாரும் டிராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை. அதிகமான பாதுகாப்பு இருக்கும் பகுதிகளிலும் நடத்தப்போவதில்லை. டெல்லியைச் சுற்றியுள்ள புறநகர் சாலையில் மட்டும் டிராக்டர் பேரணி நடக்கும். குடியரசு தினத்தன்று யாருக்கும் எங்களால் எந்தத் தொந்தரவும் இருக்காது . சட்டம்- ஒழுங்கிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் பேரணி நடத்துவோம். அது எங்களின் அரசியலமைப்பு உரிமை” எனத் தெரிவித்தார்.
அனைத்து இந்திய கிசான் சபாவின் பஞ்சாப் துணைத் தலைவர் லக்பிர் சிங் கூறுகையில், “ வரும் 26-ம் தேதி டெல்லியின் புறநகர்ச் சாலையில் மட்டுமே எங்களின் டிராக்டர் பேரணி நடக்கும். அனைத்து டிராக்டர்களிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு எங்களின் ஒற்றுமை வெளிப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
பிகேயு தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹானன் கூறுகையில், “டெல்லியில் பேரணி நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக உரிமை இருக்கிறது. குடியரசு தினத்தற்கு பேரணி நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருந்தால், டெல்லி போலீஸாருடன் அமர்ந்து பேசி, மாற்று வழியில் பேரணி செல்ல அனுமதி கேட்போம். ஆனால், 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.