

மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மென்பொறியாளர் எஸ்தர் அனுயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை வழங்கிய மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விருஷாலி ஜோஷி, “இவ்வழக்கு அரிதினும் அரிதானது என்பதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கிறேன். குற்றவாளியின் உயிர் போகும் வரை தூக்கிலிட உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்தர் அனுயா (23). மும்பையில் விடுதியில் தங்கி, டிசிஎஸ் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பரில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றார். அங்கிருந்து மும்பை திரும்பிய அவர், குர்லா அருகே உள்ள லோகமான்ய திலக் ரயில் நிலையத்துக்கு 2014 ஜனவரி 5-ம் தேதி வந்து சேர்ந்தார். அந்தேரி செல்ல வேண்டிய அவர் காணாமல் போனார்.
நான்கு நாட்களாக அனுயா பற்றிய தகவல் கிடைக்காததை அடுத்து, அவரது தந்தை ஜோனதன் பிரசாத், விஜயவாடா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
2014 ஜனவரி 16-ம் தேதி மும்பையின் புறநகர்ப் பகுதியான கஞ்சுர்மார்க் எனும் இடத்தில் அனுயாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அனுயாவின் பொருட்களை சுமந்தபடி, அனுயாவுக்கு முன்பாக ஒருவர் நடந்து செல்வது தெரியவந்தது. அங்கிருந்த சுமைதூக்கும் தொழிலாளர்களிடம் விசாரித்ததில், அந்த நபர் சந்திரபன் சனாப் (29) என்பது தெரிய வந்தது.
சந்திரபன் சனாபை 2014 மார்ச் 3-ல் நாசிக்கில் காவல் துறையினர் கைது செய்தனர்.
அந்தேரிக்குச் செல்வதற்காக காத்திருந்த அனுயாவை, காரில் கொண்டு சென்று விடுவதாக சந்திரபன் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கால் டாக்ஸி ஓட்டுநர் அல்ல எனத் தெரிந்ததும் அனுயா மறுத்துள்ளார். இருப்பினும், இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறி, அனுயாவைச் சம்மதிக்க வைத்துள்ளார் சந்திரபன்.
செல்லும் வழியில் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் கஞ்சுர்மார்க் அருகே ஆளில்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்திய சந்திரபன், அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
அனுயா போராடவே, அவரது தலையில் கல்லால் பலமுறை தாக்கியுள்ளார். பலாத்காரத்துக்குப் பின் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, புதர்களில் வைத்து எரிக்க முயன்றுள்ளார். பின்னர் எஸ்தரின் லேப்டாப், சூட்கேஸ் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார்.
வழக்கை விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றம், சந்திரபன் சனாப் குற்றவாளி என அறிவித்தது. நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டபோது, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சந்திரபனுக்கு ஏற்கெனவே பல குற்றச்செயல்களில் தொடர்பு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்திரபன் மறுப்பு
தீர்ப்பு வெளியானதும் கதறி அழுத சந்திரபன், தான் தவறாக சிக்கவைக்கப்பட்டுள்ளதாகவும், செய்யாத குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தீர்ப்பை வரவேற்றுள்ள அனுயாவின் தந்தை, தன் மகளுக்கு நீதி கிடைக்கச் செய்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.