

நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மருந்து நிறுவன உயர் அதிகாரிகளுடன், மத்திய அரசு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாடுமுழுவதும் முன்களப்பணியாளர்கள், மருத்துவ, சுகாதாரப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 2.24 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுளளது. இதில் 2-வது நாளான நேற்று மட்டும் 6 மாநிலங்களில் 17,072 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் மொத்தம் 447 பேருக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது அதில் 4 பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அதிலும் 3 பேர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டனர். ஒருவர் மட்டுமே மருத்துவர் கண்காணிப்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவனையில் இருக்கிறார். அவரும் இயல்பாக இருக்கிறார் என்று சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் அகானி தெரிவித்தார்.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள், தடுப்பூசி கொள்முதல், அடுத்தகட்ட தடுப்பூசி முகாம்களை எவ்வாறு நாடுமுழுவதும் எடுத்துச் செல்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிதத்து மருந்து நிறுவன உயர் அதிகாரிகள், பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆலோசனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பங்கேற்கவும் வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.