Last Updated : 18 Jan, 2021 03:13 AM

 

Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீட்டின் போது திமுகவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?- முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி சொல்லும் ரகசியம் ‍

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா,காங்கிரஸ் முன்னாள் தலைவர்ராகுல்காந்தி வருகையால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் காங்கிரஸின் தமிழக மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள‌ கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி, பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் இருந்து...

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உங்களையும் சேர்த்து 3 மூத்த தலைவர்கள் தேர்தல் பார்வையாளராக அறிவித்திருப்பது காங்கிரஸில் புதிய நடைமுறையாக தெரிகிறதே?

ஆமாம். அரசியல் சூழலுக்கு ஏற்றாற் போல எடுக்கப்பட்ட புதிய முடிவுதான். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் 2021-ல் நடைபெற இருக்கும் தேர்தல்களை மிகவும்முக்கியமான தேர்தல்களாக கருதுகின்றனர். அதிலும் தமிழகத்தில் ஏற்பட போகும் மாற்றம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிரொலிக்கும் என நம்புகின்றனர். எனவே, பல்லம் ராஜூ, நிதின் ராவத் ஆகியோருடன் என்னையும் தேர்தல் பார்வையாளர்களாக நியமித்துள்ளனர்.

தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் மீதான அதிருப்தியின் காரணமாகவே காங்கிரஸ் மேலிடம் உங்களை தேர்தல் பார்வையாளர்களாக அறிவித்திருப்பதாக கூறப்படுகிறதே?

தினேஷ் குண்டுராவ், கர்நாடகாவில் அமைச்சராகவும், மாநில தலைவராகவும் சிறந்த முறையில் பணியாற்றியவர். அவர் மீது நம்பிக்கை இருந்ததாலேயே மேலிட தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக இருப்பதற்காகவே எங்களை நியமித்திருக்கின்றனர். நாங்கள் மூவரும் இணைந்து எங்கள் அணியின் வெற்றிக்காக பாடுபடுவோம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழகத்தை குறி வைத்து காய்களை நகர்த்துகின்றனர். ஆனால், தமிழகத்தை ஆண்ட‌காங்கிரஸ், எந்த அழுத்தமான முயற்சியும் எடுத்தது போல தெரியவில்லையே?

தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்காமல் வெறுப்பரசியலை பேசி பாஜக வளர பார்க்கிறது. புதுச்சேரியில் ஆளுநர் வாயிலாக சட்டத்துக்கு புறம்பாக முதல்வர் நாராயணசாமிக்கு தொல்லை கொடுத்து வருகிறது. தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைவர்களாக விளங்கிய கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. பாஜக.வின் இந்த சதி அரசியலை அதிமுக புரிந்து கொள்ளாமல் இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தமிழகத்தின் மீது அளவு கடந்த பாசம் இருக்கிறது. எங்களது மாவட்ட, மாநில அளவிலான தலைவர்களை ஒருங்கிணைத்து, முறையாக அமைப்பை கட்டமைத்தால் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுவிடும். ராகுல் காந்தி பொங்கலுக்கு தமிழகத்துக்கு வந்தது போல, இனி அடிக்கடி வருவார். மீண்டும் காங்கிரஸ் வலுப்பெறும்.

தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினிடம் எத்தனை இடங்களை கேட்க போகிறீர்கள்?

முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் எனக்கு அரசியலை தாண்டி நல்ல உறவு இருந்தது. இருவரும் எழுத்தாளர்கள் என்பதால் மனதளவில் நெருக்கமாக இருந்தோம். தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனும் நல்ல நட்பு இருக்கிறது. அடுத்த முதல்வராக வருவதற்கான அனைத்து தகுதிகளும் ஸ்டாலினுக்கு வந்துவிட்டது. நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறோம்? எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை எல்லாம் இப்போது கூறுவது சரியாக இருக்காது.

கடந்த தேர்தலை போல காங்கிரஸூக்கு 40-க்கும் மேற்பட்ட இடங்களை இந்த தேர்தலில் தரக்கூடாது என திமுக நிர்வாகிகள் மட்டத்தில் பேச்சு அடிபடுகிறதே?

காங்கிரஸின் பாரம்பரிய பலத்துக்கு ஏற்றவாறு, நியாயமான எண்ணிக்கையில் இடங்களை பெறுவோம். இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்து பணியாற்றுமாறு காங்கிரஸ் மேலிடம் எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது. காங்கிரஸ் நிச்சயம் திமுக.வுக்கு செலவாக இருக்காது; வரவாக இருக்கும். எனவே, தொகுதி பங்கீட்டில் திமுக எங்களுக்கு அநீதி இழைக்காது என நம்புகிறோம்.

அப்படியென்றால் திமுக கொடுக்கும் குறைந்தப்பட்ச இடங்களை அப்படியே வாங்கி கொள்வீர்களா?

தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு திமுக தலைமை வகிப்பதைப் போல, புதுச்சேரியில் எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. இங்கு திமுக தலைமையிலும், அங்கு காங்கிரஸ் தலைமையிலும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்காக நாங்கள் எல்லா விதத்திலும் பாடுபடுவோம். தமிழகத்தில் நாங்கள் எந்தெந்த தொகுதிகளில் பலமாக இருக்கிறோமோ, அதையெல்லாம் கேட்டுப் பெறுவோம்.

இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x