

லண்டனின் சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஆய்வு நிறுவனமான லண்டன் அண்ட் பார்ட்னர்ஸ் மற்றும் டீல்ரூம்.கோ ஆய்வு நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் வேகமாக வளரும் தொழில்நுட்ப நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமாக விளங்கும் பெங்களூருவில் செய்யப்படும் முதலீடுகடந்த நான்கு ஆண்டுகளில் 5.4 மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. 2016-ல் பெங்களூருவில் செய்யப்பட்ட முதலீடு 1.3 பில்லியன் டாலராக இருந்தது, 2020-ல் 7.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் லண்டன், முனிச், பெர்லின் மற்றும் பாரிஸ் ஆகியவை உள்ளன. இந்தியாவின் நிதி மையமாக விளங்கும் மும்பை ஆறாம் இடத்தில் உள்ளது. மும்பையின் முதலீட்டு வளர்ச்சி 1.7 மடங்கு உயர்ந்துள்ளது.
வேகமாக வளரும் நகரமாக மட்டுமல்லாமல் முக்கியமாக பெங்களூரு வென்சர் கேபிடல் முதலீடுகளுக்கான நகரங்களில் ஒன்றாகவும் விளங்குவது மிக மகிழ்ச்சியான விஷயம். வென்சர் கேபிடல் முதலீட்டில் ஆறாம் இடத்தில் பெங்களூரு உள்ளது. லண்டனும் பெங்களூருவும் தொழில்முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் வலுவாக வளர்ந்து வருகின்றன. இவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என லண்டன் அண்ட் பார்ட்னர்ஸின் இந்தியப் பிரதிநிதி ஹெமின் பாருச்சா கூறியுள்ளார்.
லண்டன் மற்றும் பெங்களூரு உலகின் முக்கிய தொழில்நுட்ப மையங்களாக உருவெடுத்து வருவதன் மூலம் வலுவான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை இரு நாடுகளுக்கு இடையிலும் உருவாக்கலாம் என்றும் பாருச்சா கூறினார்.