Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று டெல்லியில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடக்கும்: விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

புதுடெல்லி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி மாபெரும் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்தமூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள போதிலும் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயசங்கங்களின் தலைவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

விவசாயிகளின் போராட்டத்தை களைப்பதற்கு பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு பல முறை முயற்சித்தது. அது பலனளிக்கவில்லை. ஆதலால், அராஜக வழியை அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ளது. என்ஐஏ, அமலாக்கத் துறை விசாரணைகள் மூலம் விவசாயிகளை பணிய வைத்துவிடலாம் என அரசு எண்ணுகிறது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.

குடியரசு தினத்தன்று மிக அமைதியான முறையிலும் ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் டிராக்டர் பேரணிநடைபெறும். எத்தகைய தடைகள் வந்தாலும் இந்தப் பேரணியை நடத்துவோம்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாயிகள் ஆதரவாக உள்ளனர். நாளைநடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், சட்டங்களில் தங்களுக்கு பாதகமாக உள்ள ்அம்சங்களை விவசாயிகள் தெரிவிப்பார்கள் என நம்புகிறோம். எனவே, விவசாயிகள் தங்கள் பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும். இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x