

சேமியாவை வீடுகளில் அத்தியாவசிய உணவுப் பொருளாக பிரபலப்படுத்திய பாம்பினோ அக்ரோடெக் நிறுவனத்தின் நிறுவனர் மியாடம் கிஷண் ராவ் (83) காலமானார்.
தொழில் துறையினரால் வெர்மிசிலி மேன் என அன்போடு அழைக்கப்பட்டவர். 1982-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியில் பங்கேற்ற பிறகு சேமியாவை மிகச் சிறந்த உணவுப் பொருளாக மாற்றி பிரபலப்படுத்தியவர். கடந்த 35 ஆண்டுகளில் பாம்பினோ பிராண்டை சர்வதேச அளவுக்கு பிரபலப்படுத்திய பெருமையும் இவரைச் சாரும். மேக்ரோனி, ஸ்பாகட்டி, பாஸ்தா உள்ளிட்ட பல்வேறு உடனடி உணவு வகைகளை இந்தியச் சந்தையில் பிரபலப்படுத்தி உள்ளது இவரது நிறுவனம்.
ஹைதராபாத் நகரில் முதலாவது ஆலை பிப்நகரில் தொடங்கப்பட்டது. இங்குதான் முதலில் ரோஸ்டட் சேமியா தயாரிக்கப்பட்டது. இவரது நிறுவனத்தில் தற்போது 600 பணியாளர்கள் உள்ளனர். இந்தூர், குர்கான் ஆகிய இடங்களிலும் ஆலைகள் உள்ளன. நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.252 கோடியாகும். பாம்பினோ நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாக இவர் புகையிலை சார்ந்த பொருள் தயாரிக்கும் ரேவதி டொபாகோ நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வந்தார்.