

'இந்துக்களும் மாட்டிறைச்சி புசிக்கின்றனர்' என கருத்து கூறி, தன்னை அரசு அரியணையில் அமரவைத்த யாதவ சமூகத்தினரை லாலு பிரசாத் இழிவுபடுத்திவிட்டார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிஹார் மாநிலம் மூங்கரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, "குஜராத் மாநிலத்தில் யாதவ சமூகத்தினர் செய்த வெண்மை புரட்சியின் காரணமாகவே அங்கு 'அமுல்' என்ற ஒரு மிகப் நிறுவனம் உருவாவது சாத்தியமானது.
ஆனால், இங்கு பிஹாரில் லாலு பிரசாத் என்ன சாப்பிடுகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்துக்களும் மாட்டிறைச்சி புசிக்கின்றனர் என கருத்து கூறி, தன்னை அரசு அரியணையில் அமரவைத்த யாதவ சமூகத்தினரை இழிவுபடுத்தியிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய கருத்தை சொல்லிவிட்டு இப்போது அதை திரும்பப் பெறுவதாக கூறுகிறார். "நான் பசுக்களை வளர்க்கிறேன். அவற்றை வணங்குகிறேன். சாத்தான் உந்துசக்தியால் தவறுதலாக என் நாக்கு அக்கருத்தை பதிவுசெய்தது" என்கிறார்.
இப்படியெல்லாம் பேசி லாலு தனது கருத்தை மறைத்துவிட முடியாது. சாத்தானுக்கு லாலு பிரசாத்தின் முகவரி எப்படி கிடைத்தது என தெரிந்துகொள்ள நான் விரும்புகிறேன். இதுவரை அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்களை எதிர்கொண்டிருக்கிறோம். இப்போதுதான் முதன்முறையாக எங்களை ஒரு சாத்தான் துரத்திக் கொண்டிருக்கிறது" என்றார் மோடி.
'பிஹாரில் வன ஆட்சி'
அவர் மேலும் பேசும்போது, "பிஹாரில் வன ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை வளர்ச்சியை அளிக்கும் ஆட்சியாக மாற்றுவது மக்களாகிய உங்கள் கைகளிலேயே இருக்கிறது" என்று மோடி கூறினார்.
நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவருமே மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தனர். ஆனால், மத்திய அரசு நிதியை மாநில வளர்ச்சிக்கு பயன்படுத்த அவர்கள் தவறிவிட்டனர் என்றும் பிரதமர் குற்றம்சாட்டினார்.