

நான்கு ஆண்டு பட்டப்படிப்பு விவகாரத்தில் நடுநிலையான முடிவை எடுக்க வலியுறுத்தி, யுஜிசி-க்கு டெல்லி பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்துள்ள கல்லூரிகளில் நான்கு ஆண்டு பட்டப்படிப்பை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வலியுறுத்தியதால் எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் 54 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பித்துள்ள 2.78 லட்சம் மாணவர்கள் தவிப்பில் உள்ளனர்.
மாணவர்களின் நலன் கருதி, மூன்றாண்டு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடரும் படி, டெல்லி பல்கலைக்கழகத்துக்கு யுஜிசி மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கு டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழ கத்தின் செய்தி தொடர்பாளர் மலாய் நீரவ் கூறும்போது, ‘‘நான்காண்டு பட்டப்படிப்புகளை மூன்றாண்டு (ஆனர்ஸ்) படிப்புகளாக மாற்றிக் கொள்கிறோம். நான்கு ஆண்டு பி.டெக். படிப்புகள் மட்டும் அப்படியே தொடரட்டும் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளோம். இதில் யுஜிசிதான் பதில் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 57 கல்லூரிகள் யுஜிசி உத்தரவை பின்பற்ற சம்மதம் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளன.
இதற்கிடையே, ராஜினாமா செய்ததாகக் கூறப்படும் துணைவேந்தர் தினேஷ் சிங் வீட்டு முன்பாக மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு ஆண்டு படிப்பை வாபஸ் பெற வலியுறுத்தி, தினேஷ் சிங்கின் கொடும்பாவியை கொளுத்தினர்.
மற்றொரு பிரிவினர் சென்ட்ரல் செக்ரடேரியட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை டெல்லி போலீஸார் கைது செய்து நாடாளுமன்ற தெரு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பல்வேறு மாணவர் அமைப்புகள் இந்த விவகாரத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. கல்லூரிகளில் கடந்த 24-ம் தேதியே தொடங்க வேண்டிய மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.