

மங்களூருவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சென்றுகொண்டிருந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. உரிய நேரத்தில் தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தியதால் மிகப்பெரிய அளவில் ஏற்பட இருந்த சோகம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதுமில்லையென அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.40 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பரவூர் மற்றும் வர்கலா நிலையங்களுக்கு இடையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ரயிலின் முன் பகுதியில் அமைந்துள்ள லக்கேஜ் வேன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. வேனில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்டு பயணிகள் அலாரம் எழுப்பி ரயிலை நிறுத்த சங்கிலியை இழுத்தனர். லோகோ பைலட் எச்சரிக்கப்பட்டார். அவர் உடனடியாக தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் லோகோ டிரைவர்கள் துரிதமாக பணியாற்றினர்.
அவர்கள் தீப்பிடித்த வேனிலிருந்து மேலும் தீ பரவாமல் தடுக்க மற்ற போகிகளை அவர்கள் பிரித்தனர். 30 நிமிடங்களுக்குள் அதை தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டது.
ரயில் பாதுகாப்பாக உள்ளது என உறுதி செய்துகொண்டபிறகு பயணம் மீண்டும் தொடங்கியது, ஆனால் திருவனந்தபுரத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல ரயில்கள் பல்வேறு நிலையங்களில் நிறுத்தப்பட்டதால் இந்த சம்பவம் மற்ற ரயில் சேவைகளை தாமதப்படுத்தியது.
லக்கேஜ் வேனில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் பைக்குகளின் உராய்வினால் தீவிபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.