

பஞ்சாப் மாநில விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தால் ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாபில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, பூச்சி தாக்குதலால் சேதமடைந்தது. இதனால் 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் இழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு, விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய பாக்கி தொகையை உடனடியாக விநியோகிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பாஸ்மதி அரிசியின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
157 ரயில்கள் ரத்து
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு விவசாய சங்கங்கள் கடந்த 7-ம் தேதி முதல் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் ரயில்வேக்கு மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் வழியாக இயக்கப்படும் 336 ரயில்களில் 157 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதர ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த வகையில் ரயில்வே நிர்வாகத்துக்கு இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பெரோஸ்பூர் பிராந்திய ரயில்வே மேலாளர் அனுஜ் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று வரை போராட்டம் நீட்டிப்பு
பஞ்சாபில் நேற்று ஐந்தாவது நாளாக ரயில் மறியல் போராட்டம் நீடித்தது. தங்கள் கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காததால் இன்று வரை ரயில் மறியல் போராட்டம் நீட்டிக்கப்படுகிறது என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனிடையே போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய சங்கங் களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த் தைக்கு முன்வர வேண்டும், அவர் களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல் வர் பிரகாஷ் சிங் பாதல் அழைப்பு விடுத்துள்ளார்.