

ஆன்லைன் மூலமாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இரண்டு சீனப் பெண்கள் உட்பட 12 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
டெல்லி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் அண்மையில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலமாக சிலர் திருடிவிட்டதாக அவர் கூறியிருந்தார். இதுபோன்ற பல புகார்கள் டெல்லியில் உள்ள சில காவல் நிலையங்களிலும் பதிவாகி இருந்தன.
இந்த நூதன மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக 5-க்கும் மேற்பட்டதனிப்படைகள் அமைக்கப்பட் டன. போலீஸார் நடத்திய விசாரணையில், டெல்லியில் பல்வேறு இடங்களில் அலுவலகங்களை அமைத்து இதுபோன்ற ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக, குற்றப்பிரிவு மற்றும் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன் இந்த மோசடியில் ஈடுபட்டு வருபவர்களின் வசிப்பிடங்கள் கண்டறியப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, டெல்லியின் பல பகுதிகளில் போலீஸார் கடந்த புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், இந்த மோசடியில் ஈடுபட்ட சாஹோஹ் டெங் டயோக் (27), வூ ஜியாஜி (54) ஆகிய சீனப் பெண்கள் உட்பட 12 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25.42 லட்சம் ரொக்கத்தை போலீஸார் கைப்பற்றினர். மேலும், ரூ.4.75 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்த அவர்களுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளையும் போலீஸார் முடக்கினர்.
என்ன மோசடி?
இதுகுறித்து டெல்லி சைபர் க்ரைம் துணை ஆணையர் அனீஷ் ராய் கூறும்போது, "அடையாளம் தெரியாத லட்சக்கணக்கான பேருக்கு வாட்ஸ் அப் மூலமாகஇந்த கும்பல் குறுந்தகவல்களை அனுப்பும். அதில், பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக வலைதளங்களில் உள்ள சில பக்கங்களை (பேஜ்) லைக் செய்தால் பணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
இதனை நம்பி அவர்கள் அனுப்பிய இணைப்பை (லிங்க்) கிளிக் செய்தால், பயனர்களின் செல்போன் ஹேக் செய்யப்படும். பின்னர் பயனர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் மூலமாக மோசடி கும்பல் பணத்தை எடுத்துவிடும். இதுபோல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இந்த கும்பல் பணத்தை எடுத்துள்ளது.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மேலும் இரண்டு சீனப் பெண்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன" என்றார்.