கோவேக்சின் தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படும்: பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்
கோவேக்சின் தடுப்பூசி மோசமான பக்கவிளைவை ஏற்படுத்தினால் உரிய இழப்பீடு வழங்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 மருந்துகளை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில், கோவேக்சின் மருந்தை ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இப்போது 55 லட்சம் டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர் வழங்கி உள்ளது. இதனிடையே, 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பு மருந்து குறித்து சிலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “தடுப்பூசி போட்டுக் கொள்வோரிடம் ஒப்புதல் படிவம் பெறப்படும். அதில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு பக்கவிளைவு ஏதேனும் ஏற்பட்டால், அரசு அல்லது அரசால்அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மனைகளில் உயர் தரமான சிகிச்சை வழங்கப்படும் எனஅந்தப் படிவத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும். தடுப்பு மருந்து காரணமாக மோசமான பக்க விளைவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
பரிசோதனை நிலையில் உள்ள தடுப்பு மருந்து காரணமாக பக்கவிளைவு ஏற்பட்டால், பாதிக்கப்படும் நபருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டியது மருந்து உற்பத்தி நிறுவனத்தின் கடமை என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
