

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள மேரிஸ் ஸ்டெல்லா கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வருபவர் ரிஷிதா ஜலாடி (20). இவர், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில் பங்கேற்று ‘திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு மூலம் நாட்டில் வறுமையை ஒழித்தல்’ என்ற தலைப்பின் கீழ் 4 நிமிடம் பேசினார். அவர் பேசியதாவது:
நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள அனைவருக்கும் யூபிஐ (Universal Basic Income). அதாவது உலகளாவிய அடிப்படை வருமானம் எனும் திட்டத்தின் கீழ் பணம் கொடுப்பதன் மூலம் வறுமையை ஒழித்து விடலாம். இதன்படி ஒவ்வொரு வருடமும் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக இணைந்து ஏழை மக்களுக்கு பணம் வழங்கலாம்.
இத்திட்டம் நம் நாட்டில் முதன் முறையாக சிக்கிம் மாநிலத்தில் அமலில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவரது பேச்சைக் கேட்டு மேடையிலிருந்தவர்கள் கரவொலி எழுப்பினர். இதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டர் மூலம் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் விஜயவாடா திரும்பிய மாணவி ரிஷிதாவை கிருஷ்ணா மாவட்ட ஆட்சியர் இந்தியாஸ் நேரில் சென்று வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.