Published : 16 Jan 2021 07:58 PM
Last Updated : 16 Jan 2021 07:58 PM

மிகப்பெரிய ஆசுவாசம்: கரோனா தடுப்பூசி குறித்து ஹர்ஷ்வர்தன் பெருமிதம்

கரோனா தடுப்பூசி திட்டம் மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகையே உலுக்கிய கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் பல்வேறு நாடுகளில் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன. முதல் கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் அடுத்த சில மாதங்களுக்குத் தொடர்ந்து நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கோவிட்-19 வைரஸுக்கு எதிராக சஞ்சீவினி மருந்தைப் போல, நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. முன்னதாக வெற்றியை நோக்கி இந்தப் போர் பயணித்தது. தடுப்பூசி மூலம் வெற்றி விரைவில் கிடைப்பது உறுதியாகி உள்ளது. கரோனா தடுப்பூசி திட்டம் மிகப்பெரிய ஆசுவாசத்தை அளித்திருக்கிறது.

கடந்த மூன்று, நான்கு மாதங்களாகக் கரோனா தொற்று தொடர்ந்து கணிசமாகக் குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 2.11 லட்சம் கரோனா தொற்று நோயாளிகள் உள்ளனர். தொற்றை மேலும் குறைக்க, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதைச் சாத்தியமாக்கிய விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய ஆராய்ச்சியை வெற்றிகரமாக மேற்கொள்ள மருத்துவப் பரிசோதனைகளுக்கு முன்வந்த தன்னார்வலர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x