Last Updated : 16 Jan, 2021 05:25 PM

 

Published : 16 Jan 2021 05:25 PM
Last Updated : 16 Jan 2021 05:25 PM

தடுப்பூசி இயக்கத்துக்கு உற்சாக வரவேற்பு: கரோனா வைரஸ் ராவணனை எரித்துக் கொண்டாடிய பாஜக

இந்தியாவில் தடுப்பூசி போடும் முதல் கட்டப் பணி தொடங்கியுள்ள நிலையில் மும்பையில் 'கரோனா வைரஸ் ராவணன்' உருவ பொம்மையை எரித்தும் பட்டாசு வெடித்தும் பாஜகவினர் கொண்டாடினர்.

கரோனாவை முற்றிலுமாக ஒழிக்கும் விதமாக கோவிட்-19 தடுப்பூசிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இந்தியாவெங்கும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த ‘கோவிஷீல்டு’, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய ‘கோவேக்ஸின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு சில வாரங்களுக்கு முன் அனுமதி வழங்கியது.

அவசரகாலப் பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள கோவிட்-19க்கான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணிக்கு காணொலி நிகழ்ச்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

தடுப்பூசி போடும் பணிகளின் முதல் கட்டம் இந்தியா முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் சனிக்கிழமை மும்பையின் கட்கோபர் பகுதியில் 'கரோனா வைரஸ் ராவணன்' உருவ பொம்மையை எரித்து, பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர். இதில் பொதுமக்களும் உறசாகமாக கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரும் நடனமாடினர். வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.

இதுகுறித்து மேற்கு கட்கோபர் எம்எல்ஏ ராம் கதம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. தேசம் முழுவதும் நீண்டகாலமாக காத்திருந்த நாள் இன்று.

ராமர் இலங்கையிலிருந்து அயோத்தி திரும்பியபோது கொண்டாடப்பட்டதைப் போலவே நாங்கள் இன்று தீபாவளியைக் கொண்டாடினோம். பலருக்கு உதவிய கோவிட் வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய நேரம் இது.

கடந்த ஒன்பது மாதங்களில் உலகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இயல்புநிலை திரும்பும் என்று நம்புகிறேன்''.

இவ்வாறு மேற்கு கட்கோபர் எம்எல்ஏ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x