

குஜராத்தில் படேல் சமூகத்தை ஓ.பி.சி. பிரிவில் சேர்க்கக் கோரி நடக்கும் போராட்டத்தை ஒடுக்காமல் பாஜக தலைவர் அமித் ஷா சற்று ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.
பாஜக ஆளும் குஜராத்தில், படேல் சமூகத்தினரின் நியாயமான போராட்டம் ஒடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமித் ஷாவின் சொந்த ஊரான அகமதாபாதில், படேல் சமூகத்தினரின் போராட்டம் ஒடுக்கப்படுவதை நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்ததாக ஹர்திக் குற்றம்சாட்டி எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.
பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு பதில் அளிக்கும் விதமாக அவர் தனது வாட்ஸ்ஆப்-லிருந்து பரப்பியுள்ள செய்திக்குறிப்பில், "இடஒதுக்கீடு தொடர்பான படேல் சமுதாய போராட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா தலையிடாமல் இருப்பது நல்லது. இந்தப் போராட்டம் ஓயாது. இந்தப் போராட்டம் நிற்க வேண்டுமென்றால் நீங்கள் என்னைக் கொன்றால் மட்டுமே அது முடியும்.
என்னை நீங்கள் கொன்றாலும், என்னைப் போல ஆயிரம் ஹர்திக் படேல்கள் எழுவார்கள். எங்களது நியாயமான கோரிக்கையை ஏற்று நீதி கிடைக்க வழி ஏற்படுத்துங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
படிதர் அனமத் அந்தோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவரான ஹர்திக் படேல், குஜராத்தில் படேல் இடஒதுக்கீடு போராட்டக்குழுவை ஒருங்கிணைத்து பலரால் பேசப்பட்டார். தொடர்ந்து, பாரதிய படேல் நவநிர்மாண் சேனா என்ற புதிய அமைப்பை அவர் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.