காஷ்மீர் சுவர்களில் அச்சுறுத்தல் போஸ்டர்கள்: பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 5 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் | படம்: ஏஎன்ஐ
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

காஷ்மீர் சுவர்களில் அச்சுறுத்தல் மிக்க போஸ்டர்களை ஒட்டிய பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

காஷ்மீரின் அவந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த டிரால் சீர் மற்றும் படகுண்ட் கிராமங்களில் இந்த போஸ்டர்கள் காணப்பட்டன. மேலும், பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்துக் காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்:

"ஜனவரி 13, 2021 அன்று, டிரால் பகுதியின் சீர் மற்றும் படகுண்ட் கிராமங்களில் பயங்கரவாத அமைப்பின் சில அச்சுறுத்தல் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக டிரால் காவல் நிலையத்தில், சட்டவிரோதச் செயல்கள் மற்றும் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் கிராமத்தைச் சேர்ந்த பலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் பல இடங்களில் சோதனை நடத்தியது. அதன்படி, பயங்கரவாத கூட்டாளிகள் 5 பேர் சீர் மற்றும் படகுண்ட் பகுதியில் கூறப்பட்ட அச்சுறுத்தல் போஸ்டர்களை ஒட்டுவதில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர்களைச் சுற்றிவளைத்து போலீஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஜஹாங்கிர் அஹ்மத் பரே, ஐஜாஸ் அஹ்மத் பரே, டவ்ஸீப் அஹ்மத் லோன், சப்ஜார் அஹ்மத் பட் மற்றும் கைசர் அஹ்மத் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குல்ஷன்போரா டிராலில் வசிப்பவர்கள். இவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது''.

இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் பயன்படுத்திவந்த அச்சுறுத்தல் போஸ்டர்களைத் தயாரிக்கவும் அச்சிடவும் பயன்படுத்தப்படும் ஒரு லேப்டாப் மற்றும் அச்சுப்பொறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in