Published : 16 Jan 2021 09:23 AM
Last Updated : 16 Jan 2021 09:23 AM

வல்லபாய் படேல் சிலை; சென்னை- கெவாடியா உட்பட 8 புதிய ரயில்கள் நாளை தொடக்கம்

புதுடெல்லி

சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்களை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

குஜராத்தில் ரயில்வே துறை சார்ந்த பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.நாட்டின் பல பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு 8 ரயில்களை நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும். இந்நிகழ்ச்சியின் போது, குஜராத்தில் ரயில்வே துறை தொடர்பான பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். குஜராத் முதல்வர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

குஜராத்தில் தபோய் - சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத் -கெவாடியா புதிய அகல ரயில் பாதை, பிரதாப் நகர் - கெவாடியா மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடம், தபோய், சந்தோத் மற்றும் கெவாடியா பகுதியில் புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த கட்டிடங்கள், உள்ளூர் அம்சங்கள் மற்றும் பயணிகளுக்கான நவீன வசதிகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பசுமை சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் ரயில் நிலைய கட்டிடம் கெவாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டங்கள், அருகில் உள்ள பழங்குடியினர் பகுதிகளில் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். நர்மதை ஆற்றங்கரையில் உள்ள முக்கிய புனித தலங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை அதிகரிக்கும். இப்பகுதியின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வினையூக்கியாக இத்திட்டங்கள் இருக்கும். இவை புதிய வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக வாய்ப்புகளையும் உருவாக்கும்.

பிரதமரால் தொடங்கி வைக்கப்படவுள்ள ரயில்களின் விவரம்:

1. கெவாடியாவிலிருந்து - வாரணாசி செல்லும் மஹாமனா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் (09103/04)

2. தாதர் - கெவாடியா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (02927/28)

3. அகமதாபாத்திலிருந்து கெவாடியா செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (09247/48)

4. கெவாடியா - எச்.நிஜாமுதீன், நிஜாமுதீன் - கெவாடியா சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை ரயில் (09145/46)

5. கெவாடியா - ரெவா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் ( 09105/06)

6. சென்னை - கெவாடியா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் (09119/20)

7. பிரதாப் நகர் - கெவாடியா தினசரி மின்சார ரயில் (09107/08)

8. கெவாடியா - பிரதாப் நகர் தினசரி மின்சார ரயில் (09109/10)

ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், வான் பகுதியை பார்வையிடும் வகையில் கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய ‘விஸ்தா - டூம் சுற்றுலா பெட்டிகள்’ உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x