

நிரந்தர கணக்கு எண் (பான்) மூலம் கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கும் சாப்ட்வேரை உருவாக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் சாப்ட்வேர் பொறியாளர்கள் இணைந்து இதற்கான சாப்ட்வேரை உருவாக்கும் முயற்சியின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர்.
வர்த்தகம் சார்ந்த பணிகளில் பயன்படுத்தப்படும் பான் அட்டை ( ஐடிபிஏ-பான்) அட்டை மூலம் நாடு முழுவதும் உள்ள பான் அட்டைதாரர்களின் கணக்கு பரிவர்த்தனைகளை சோதிக்கும் பணி நடைபெறுகிறது.
இந்தப் பணியில் வரித்துறையைச் சேர்ந்த நிபுணர்கள், சாப்ட்வேர் உருவாக்க பொறியாளர்கள் ஆகியோரடங்கிய குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சோதனை நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது.
தலைநகர் டெல்லியில் இது தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி பொறியாளர்கள் உருவாக்கியுள்ள சாப்ட்வேரைப் பயன்படுத்துவதன் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் பான் அட்டை எண்ணை பயன்படுத்தி நாட்டின் எந்த மூலையில் வர்த்தகம் புரிந்திருந்தாலும் அதைப் பார்க்க முடியும்.
இதன்மூலம் சந்தேகப்படும் படியான வர்த்தகம் புரிந்துள்ளவரின் விவரத்தை ஆரம்பத்திலிருந்தே கம்ப்யூட்டரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பார்த்து விட முடியும். தேவைப்பட்டால் அதை பிரிண்ட் அவுட் எடுத்து ஆவணமாகவும் காட்ட முடியும். இந்த சாப்ட்வேர் விரைவிலேயே செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.