Last Updated : 15 Jan, 2021 11:16 AM

 

Published : 15 Jan 2021 11:16 AM
Last Updated : 15 Jan 2021 11:16 AM

50 ஆண்டுகளில் முதல் முறை; குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக யாரும் பங்கேற்கவில்லை: மத்திய அரசு தகவல்

கோப்புப் படம்.

புதுடெல்லி

உலக அளவில் கரோனா வைரஸ் பரவலையடுத்து, குடியரசு தின நிகழ்ச்சியில் இந்த ஆண்டு வெளிநாடுகளைச் சேர்ந்த எந்தத் தலைவரும் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக, சிறப்பு விருந்தினராக எந்தச் சிறப்பு விருந்தினரையும் அழைக்காமல் குடியரசு தின நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “உலக அளவில் கரோனா வைரஸ் பரவல் இருக்கும் சூழலில், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக எந்த நாட்டின் தலைவர்களும் பங்கேற்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு குடியரசு தினத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் பங்கேற்பார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக போரிஸ் ஜான்ஸன் வருகையும் கடந்த 5-ம் தேதி திடீரென ரத்து செய்யப்பட்டது.

கடந்த 1966-ம் ஆண்டு கடைசியாக எந்தச் சிறப்பு விருந்தினரும் வராமல் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதற்கு முன் கடந்த 1952, 1953 ஆண்டுகளிலும் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினர் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடந்தன.

கடந்த ஆண்டு பிரேசில் அதிபர் ஜேர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2019-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போஸா, 2018-ல் ஏசியான் நாடுகளின் 10 தலைவர்களும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

2017-ம் ஆண்டில் அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நயானும், 2016-ல் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலன்டேவும் பங்கேற்றார்கள். 2015-ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா குடியரசு தினத்தில் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x