Last Updated : 15 Jan, 2021 07:57 AM

 

Published : 15 Jan 2021 07:57 AM
Last Updated : 15 Jan 2021 07:57 AM

வேளாண் சட்டங்கள்: உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவில் இருந்து பாரதிய கிசான் சங்கத் தலைவர் விலகல்

பிகேயு தலைவர் பூபேந்தர் சிங் மான் : கோப்புப்படம்

சண்டிகர்


வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலான சிக்கலைத் தீர்க்க உச்ச நீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட சமரசக் குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பூபேந்திர சிங் மான் விலகியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் பிகேயு தலைவர் பூபேந்திர் சிங் மான் இடம் பெற்றது தெரிந்தவுடன், பிகேயு அமைப்பின் பஞ்சாப் அமைப்பு, அவரிடம் இருந்து விலகி இருக்க முடிவு செய்தது. இதையடுத்து, பூபேந்திர் சிங் விலகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்களைஎதிர்த்து மனுத்தாக்கல் செய்த மனுதார்ரகளில் ஒருவராக பூபேந்தர் சிங் மான் இருந்து கொண்டு அவரே உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் எவ்வாறு இடம் பெற முடியும் என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருந்தது.

அதுமட்டுமல்லாமல், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும் 4 பேர்தான் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள் என விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டிய நிலையில் பூபேந்தர் சிங் மான் விலகியுள்ளார்.

வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது. அந்தக் குழுவில், “ பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா(மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசியஇயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பூபேந்தர் சிங் மான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ ஒரு விவசாயியாகவும், விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் என்னை நான் கருதுகிறேன். ஆனால், விவசாயிகள் சங்கத்துக்கு இடையேயும், மக்களிடையேயும் என்னைப் பற்றிய சில கவலைகள் எழுந்துள்ளன. பஞ்சாப் மற்றும் விவசாயிகள் நலனில் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன்.

அதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆதலால், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து என்னை நான் விடுவித்துக் கொள்கிறேன். என்னை நியமித்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் எப்போதும் பஞ்சாப் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருப்பேன்”

இவ்வாறு மான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூபேந்தர் சிங் மான் முடிவை பல்வேறு பஞ்சாப் பிகேயு அமைப்பின் தலைவர் பல்ேதவ் சிங் மியான்பூர் வரவேற்றுள்ளார். அதேபோல, காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங், பாரதி கிசான் யூனியன், உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களும் பூபேந்தர் முடிவை வரவேற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x