கரோனா தடுப்பூசி முகாம்: வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்; செயலியை அறிமுகம்செய்து கலந்துரையாடல்

பிரதமர் மோடி : கோப்புப்படம்
பிரதமர் மோடி : கோப்புப்படம்
Updated on
2 min read


நாடுமுழுவதும் வரும் 16-ம் தேதி நடத்தப்படும் கரோனா தடுப்பூசி முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினம்தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரப் பணியாளர்களுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

வரும் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கும் கரோனா தடுப்பூசி போடும் முகாமில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

கரோனா தடுப்பூசி போடும் முகாமில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதலுக்கான ஆர்டர்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்த மருந்துகள் அனைத்தும் விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, சண்டிகர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகப்பெரிய அளவில் தொடங்கப்படும் கரோனா தடூப்பூசி முகாமை வரும் 16-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் 16-ம் தேதி நாடுமுழுவதும் நடத்தப்படும் கரோனா தடுப்பூசி முகாமை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதுமட்டுமட்டாமல் அன்றைய தினத்தில் கோ-வின்(CO-WIN) எனும் செயலியையும் பிரதமர் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த செயலி மூலம் கரோனா தடுப்பூசி போட்டவர்களின் விவரங்கள், தடுப்பூசி பகிர்மானம், டெலிவரி ஆகியவற்றை அறிய முடியும்.

இந்த கரோனா தடுப்பூசி மூகம் நாடுமுழுவதும் 2,934 மையங்களில் நடக்கிறது. முதல்நாளில் ஒரு முகாமுக்கு 100 சுகாதாரப் பணியாளர்கள் வீதம் ஏறக்குறைய 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.

இதில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 100 மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். இந்த உரையாடலுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்பவசதிகளைச் செய்யுமாறு அந்தந்த குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதற்காக 1.60 கோடி டோஸ் மருந்துகள் மத்தியஅரசால் வாங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in