Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ ஏதுவாக எல்லையில் ரகசிய சுரங்கம்: பாக். சதியை முறியடித்த இந்திய ராணுவம்

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ரகசிய சுரங்கப் பாதை நுழைவாயில் அருகே பாதுகாப்புப் படையினர்.படம்: பிடிஐ

புதுடெல்லி

காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக ரகசிய சுரங்க வழிப்பாதையை பாகிஸ்தான் நாட்டவர் அமைத்திருப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டம், ஹிராநகர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பிஎஸ்எப்) கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு ரகசிய சுரங்கப் பாதையைக் கண்டறிந்தனர். பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியப் பகுதி வரை இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜீரோ லைனில் இருந்து 300 அடி தூரத்திலும் இந்திய எல்லை வேலியிலிருந்து சுமார் 65 அடி தூரத்திலும் இந்த சுரங்க வழி காணப்படுகிறது என்று பிஎஸ்எப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கடந்த ஆண்டு நவம்பரில் இதேபோன்று ஒரு ரகசியப் பாதையை தீவிரவாதிகள் அமைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். தற்போது மேலும் ஒரு ரகசிய சுரங்கத்தை அவர்கள் அமைத்து தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய முயற்சித்து வருகின்றனர். அதை நாங்கள் தற்போது வெற்றிகரமாக முறியடித்துள்ளோம்.

இந்த சுரங்கம் 3 அடி அகலம், 25 முதல் 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எப் படையின் 173-வது பட்டாலியன் பிரிவினர் இந்த சுரங்கத்தைக் கண்டறிந்தனர். சுரங்கத்திலிருந்து வெளியேறும் வழியை மணல் மூட்டைகளால் மறைத்து வைத்திருந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருவதையே இது காட்டுகிறது. எல்லைப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். அந்த நேரத்தில் இந்திய ராணுவத்தை திசை திருப்பி தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சி நடக்கிறது.

ஆனால் அதை நாங்கள் திறம்பட சமாளித்து ஊடுருவலைத் தடுத்து வருகிறோம். குளிர்காலத்தில் அதிக அளவில் ஊடுருவலை நடத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ரகசிய சுரங்கப் பாதை அமைத்து தீவிரவாதத்தைத் தூண்டுவதுதான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x