

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் நேற்று 7 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மஜத கூட்டணி அரசுக்கு ஆதரவளித்த 15 எம்எல்ஏ.க்கள் பாஜகவுக்கு தாவினர். இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, பாஜக சார்பில் முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார். இதையடுத்து கட்சி மாறிய 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இதில் மீதம் இருந்த 5 பேர் அமைச்சர் பதவி கேட்டு எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தனர். அதே வேளையில் பாஜகவை சேர்ந்த மூத்த எம்எல்ஏக்கள் 10-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவி கோரி போர்க்கொடி தூக்கினர். இதனால் நீண்ட காலமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், பாஜக எம்எல்ஏ-க்கள் உமேஷ் கத்தி, அரவிந்த் லிம்பாவலி, எஸ்.அங்கரா, முருகேஷ் நிராணி, எம்எல்சி.க்கள் எம்டிபி நாகராஜ், ஆர்.சங்கர், சி.பி. யோகேஸ்வர் ஆகிய 7 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், கலால் துறை அமைச்சர் ஹெச்.நாகேஷ் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள அவரது ஆதாரவாளர்கள் பெங்களூரு அனந்தராவ் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவில் அதிருப்தி
காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி எம்எல்ஏ முனி ரத்னாவும், மஜதவில் இருந்து மாறிய விஸ்வநாத்தும் அமைச்சர் பதவி கோரினர். ஆனால் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து அமைச்சர்கள் அசோக், சிவராஜ் பொம்மை அந்த இருவரின் வீட்டுக்கு சென்று சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.