

விவசாயிகள் கூட்டமைப்பின் ஆலோசகர் பி.செங்கல் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
விவசாயிகள் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும், புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக எந்த வேளாண் அமைப்பும் மனு தாக்கல் செய்யவில்லை. விவசாய கூட்டமைப்பின் சார்பில் எங்கள் மனுவை ஏற்க வேண்டும். வேளாண் சட்டங்கள் தொடர்பாக முடிவு எடுக்கும் முன்னதாக, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கத்துடன் ஆலோசனை நடத்த வேண்டும்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் எண்ணிக்கை, நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் வெறும் 6 சதவீதம் தான். விவசாயிகளின் பிரச்சினைகளை நேரடியாக நீதிமன்றம் அல்லது அரசிடம் தெரிவிப்பதற்கு வாய்ப்பு உருவாகவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக வேளாண் துறையில் எந்த சீர்திருத்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகள் அனைத்தும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதைத்தான் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனும் சரத் ஜோஷியும் வலியுறுத்தினர்.
குறைந்தபட்ச ஆதார விலை என்பது விவசாய உற்பத்தியில் வெறும் 5 சதவீதம் மட்டுமே. அதுவும் நெல், கோதுமை ஆகியவற்றுக்கு மட்டும்தான் குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் இத்தகைய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் சதவீதம் அதிகபட்சம் 10 சதவீதம்தான். எஞ்சியுள்ள 90 சதவீத விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர்.
எனவே, புதிய வேளாண் சட்டங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்காக வேளாண் துறையில் தனியார், கூட்டுறவு அமைப்புகளை பங்கேற்க அனுமதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.