

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகியின் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
டெல்லி, குர்கான், நொய்டா, காஸியாபாத் ஆகிய பகுதிகளில் தியாகியின் சகோதரர்களான சஞ்சீவ், சந்தீப் மற்றும் ராஜீவ் ஆகியோருக்கு சொந்தமாக உள்ள விலை உயர்ந்த 5 அடுக்கு மாடி குடியிருப்புகளை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
ரூ.6.2 கோடி மதிப்பிலான இந்த சொத்துகள் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் ஈட்டிய பணத்தில் வாங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, தற்காலிகமாக இந்த சொத்துகளை முடக்கி உள்ளோம் எனவும் அத்துறை தெரிவித்துள்ளது. இந்த சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கியப் பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தைச் சேர்ந்த பிரிட்டனிலிருந்து செயல்படும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள சிலருக்கு லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கில் தியாகி, அவரது குடும்ப உறுப்பினர்கள், இடைத்தரகர்களான கெரோசா, மைக்கேல், ஹாஷ்க் மற்றும் 6 நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.