Last Updated : 13 Jan, 2021 06:28 PM

 

Published : 13 Jan 2021 06:28 PM
Last Updated : 13 Jan 2021 06:28 PM

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே மிகப்பெரிய கேள்வித்தொகுப்பு வழங்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல்

கோப்புப் படம்.

புதுடெல்லி

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுக்கு முன்கூட்டியே மிகப்பெரிய கேள்வித் தொகுப்பு வழங்கிட வேண்டும். அந்தக் கேள்வித் தொகுப்பிலிருந்து தேர்வுக்குக் கேள்விகளை எடுக்கலாம் என கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் மாணவர்களால் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று பயில முடியவில்லை. பெரும்பாலானோர் ஆன்லைன் வகுப்புகள் மூலம்தான் கல்வி கற்றுள்ளனர். இதனால் கல்வி கற்றலில் பெரும் இடைவெளி இருந்திருக்கும். ஆதலால், இந்த முறை 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கு முன்பே இந்த கேள்வித் தொகுப்பை வழங்குவது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கரோனா பாதிப்பால் பள்ளிக் கல்வியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் ஆகியோர் அளித்த பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலால் நடப்புக் கல்வியாண்டில் மாணவர்கள் கற்றலில் இடைவெளி இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இணையதளப் பிரச்சினை காரணமாக ஏராளமான மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கூட சரிவரப் பங்கேற்க முடியாத சூழல் இருந்துள்ளது எனத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்தது.

ஆன்லைன் வகுப்புகள் என்பது வசதியான குழந்தைகளுக்கு மட்டும்தான் சாத்தியமானது. ஏழை மாணவர்களுக்குச் சாத்தியமாகவில்லை. அவர்களிடம் ஸ்மார்ட்போன், லேப்டாப் வசதியில்லை என்பதை நிலைக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் எடுத்துரைத்தனர்.

இதையடுத்து, கல்விக்கான நிலைக்குழுவின் தலைவர் பாஜக எம்.பி. வினய் சஹஸ்ரபுத்தே அளித்த ஆலோசனையில், “தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி ஆகியவை கல்வி தொடர்பாக எடுக்கும் வகுப்புகள் குறித்து மத்தியக் கல்வித்துறை அமைச்சகம் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்திருக்க வேண்டும். இணையதளம் இல்லாத மாணவர்களுக்கு தூர்தர்ஷன், வானொலி மூலம் வகுப்புகள் கிடைப்பது எளிது. இரு ஊடகங்களும் நாடு முழுவதும் பரந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு முன்பே, மிகப்பெரிய அளவில் கேள்வித் தொகுப்பு வழங்கிட வேண்டும் என நிலைக்குழு தலைவர் அளித்த ஆலோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அனைத்துப் பாடங்களில் இருந்தும் இந்தக் கேள்வித் தொகுப்பு அமைய வேண்டும். இந்தக் கேள்வித் தொகுப்பிலிருந்து கேள்விகளைத் தேர்வுக்குக் கேட்கலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கேள்வித் தொகுப்பு என்பது அனைத்துப் பாடப்பிரிவுகளையும் உட்படுத்தியதாகவும், அதில் அனலிட்டிகல் மற்றும் லாஜிக்கல் குறித்த கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x