

எந்த மாநிலத்திலும், எங்கேயும் அகில இந்தியா வானொலி நிலையம் மூடப்படவில்லை என பிரசார் பாரதி இன்று தெளிவுபடுத்தியுள்ளது.
அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடப்படுவதாக நாடு முழுவதும் பல ஊடகங்களில் வெளியான செய்திகள் ஆதாரமற்றவை எனவும், தவறானவை எனவும் பிரசார் பாரதி தெளிவாகக் கூறியுள்ளது.
எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் எந்த அகில இந்திய வானொலி நிலையமும், தரம் குறைக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை என பிரசார் பாரதி மேலும் கூறியுள்ளது. மேலும் அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களும் உள்ளூர் நிகழ்ச்சிகளை மொழியியல், சமூக-கலாச்சார மற்றும் மக்கள்தொகை பன்முகத்தன்மைக்கு ஏற்ப தொடர்ந்து உருவாக்கும், மேலும் உள்ளூர் திறமைகளை வளர்ப்பதற்கான அகில இந்திய வானொலியின் பணி மேலும் அதிகரிக்கும்.
2021-2022ம் நிதியாண்டில், பல முக்கிய திட்டங்கள் அமல்படுத்த தயாராக உள்ளதாலும், நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட புதிய எப்.எம் ரேடியோக்களுடன் தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தவுள்ளதாலும், அகில இந்திய வானொலி நிலையங்களை வலுப்படுத்தும் திட்டங்களைக் கொண்டிருப்பதாக பிரசார் பாரதி மேலும் அறிவித்துள்ளது.
சில நூறு வானொலி நிலையங்கள், பல நூறு ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களுடன், உலகின் மிகப் பெரிய ஒலிபரப்புச் சேவை நிறுவனங்களில் ஒன்றாக அகில இந்தியா வானொலி உள்ளது. எப்.எம், எம்.டபிள்யூ, எஸ்.டபிள்யூ, செயற்கைகோள் டிடிஎச் ரேடியோ, இன்டர்நெட் ரேடியோ (NewsOnAir App ) என பல விதங்களில் அகில இந்திய வானொலி நெட்வொர்க் செயல்படுகிறது.