உ.பி. அரசு மாறவில்லை; நாள்தோறும் பெண்களுக்கு எதிராக 165 குற்றங்கள்; பாதுகாப்பு பெயரளவில்தான்: பிரியங்கா காந்தி சாடல்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி : கோப்புப்படம்
Updated on
2 min read

உத்தரப் பிரதேசத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிராக 165 குற்றங்கள் பதிவாகின்றன. பெண்கள் பாதுகாப்பு குறித்து கோடிக்கணக்கான ரூபாயில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால், கள நிலவரத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பலாத்கார குற்றங்கள், கொலை போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

''உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் சக்தி எனக் கோடிக்கணக்கான ரூபாயைச் செலவு செய்து விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால், நாளேடுகளையும், ஊடகங்களையும் பார்த்தால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த செய்திகள் அதிகம் வருகின்றன.

அதிலும் உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் சொந்த ஊரில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகளைக் காப்போம் ஆகிய பிரச்சாரத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என ஊடகம் வாயிலாக அறிந்தேன்.

ஆனால், கள நிலவரத்தில் பார்த்தால், அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை. சமீபத்தில் கோரக்பூரில் மட்டும் 12க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

தவறு செய்தவர்களை விட்டுவிடுகின்றனர். சில வழக்குகளில் இறந்துபோன பெண் யாரென்றுகூட போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் நாள்தோறும் சராசரியாகப் பெண்களுக்கு எதிராக 165 குற்றங்கள் நடக்கின்றன.

அரசின் கட்டுப்பாட்டில் காவல் நிலையம் இயங்குகிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து பெண் பாதுகாப்புக்கு அரசே விளம்பரம் செய்கிறது. ஆனால், ஒரு பெண் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றால், அவர் மீது இரக்கம் காட்டுவதற்கு பதிலாக தவறான விமர்சனங்களும், ஏளனப் பேச்சுகளும், அவமரியாதையும் செய்யப்படுகின்றன. இதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

ஹத்ரஸ், உன்னவ், பதுன் ஆகிய சம்பவங்களில் பெண்கள் பாதுகாப்பில் உத்தரப் பிரதேச அரசின் மனநிலை என்ன என்பதை ஒட்டுமொத்த தேசமும் கண்டது. பெண்கள் பாதுகாப்பு குறித்த அடிப்படைப் புரிதல் என்னவென்றால், பெண்கள் குரல்தான் முதன்மையாக இருக்கவேண்டும். ஆனால், உத்தரப் பிரதேச அரசில், எப்போதும் எதிராகத்தான் இருக்கும்.

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் சக்தி ஆகியவை எல்லாம் உ.பி. அரசின் வெற்று முழக்கங்கள். பெண்களுக்கு எதிரான நடத்தையில் உ.பி. அரசு மாறவில்லை. அவர்கள் மீது எந்தவிதமான உணர்வும் காட்டவில்லை.

வேதனைக்குள்ளான பெண், அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குரல் எழுப்பும்போது, ஆளும் கட்சியினரே தவறான கருத்துகளைப் பெண்ணை நோக்கிப் பாய்ச்சினால், அதைவிட வெறுக்கத்தக்க செயல் வேறு ஏதும் இல்லை.

பெண்களின் குரலை மரியாதையுடன் கேட்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை வெளிக்கொண்டு வருவதும்தான், பெண்கள் பாதுகாப்பின் முதன்மையானதாகும்''.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவி்த்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in