மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும்: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்
Updated on
1 min read

மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசியை மத்திய அரசு வழங்காவிட்டால், டெல்லி அரசு வழங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி முகாமை வரும் 16-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் முதல்கட்டமாக கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக நாடுமுழுவதும் 3 கோடி அளவில் மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், டெல்லியில் கரோனா வைரஸுக்கு எதிரான பணியில் இருந்து உயிரிழந்த மருத்துவர் ஹிதேஷ் குப்தா இல்லத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்றரார். டெல்லி அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளபடி, கரோனா பணியில் உயிரிழக்கும் மருத்துப்பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு ரூ ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்பதை உறுதி செய்யும் விதமாக ஒரு கோடிக்கான காசோலையை மருத்துவர் ஹிதேஸ் மனைவியிடம் கேஜ்ரிவால் வழங்கினார்.

அதன்பின் அங்கிருந்து முதல்வர் கேஜ்ரிவால் புறப்பட்டபோது, நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். அவ்வாறு மத்திய அரசு இலவசமாக வழங்காவிட்டால், தேவைப்படும் பட்சத்தில் டெல்லி மக்களுக்கு இலவசமாக டெல்லி அரசே வழங்கும்.

கரோனா தடுப்பூசி குறித்து முழுமையாகத் தெரியாமல் யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். கரோனா ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை ஊக்கப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

அந்த வகையில் இந்தப் பணியில் உயிரிழந்த மருத்துவர் ஹிதேஸ் குடும்பத்தாருக்கு டெல்லி அரசு கூறியபடி ரூ.ஒரு கோடி காசோலையை வழங்கப்பட்டது. மருத்துவர் ஹிதேஸ் மனைவி நன்கு படித்தவர் என்பதால், அவருக்கு டெல்லி அரசு சார்பில் பணி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in